
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
English Meaning:
Prayer Takes Jiva to States Beyond Three PasasEven with Pasas (three),
Attainments there can be;
Daily contemplate on Jnana
That moves you to the goal ultimate,
Unintermittent do pray;
Praying thus,
Yours will be a Light that shall beam
As from a hill-top high.
Tamil Meaning:
உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப் பற்றுச்சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.Special Remark:
`அது வெளிப்பட்டு விளங்கவே, முன் மந்திரத்திற் கூறியபடி பாசம் அறுக்கப்படப் பதியைப் பற்றிக் கொள்ளும் நிலை உளதாம்` என்பது குறிப்பெச்சம். `கிடக்கின்ற ஆற்றிலே` என உருபு விரித்துக்கொள்க. பயன், உயிர்கள் அடையத்தக்க பயன் `அவை அறம் முதலிய நான்கு` என்பது வெளிப்படை. நடத்தல், இங்கு நீங்குதல். ``இம்மூன்றும் - விட்டதே பேரின்ப வீடு`` என்னும் ஔவையார் வாக்கையும் நினைக. நடக்கின்ற ஞானம் - நடத்தற்கு ஏது வாகிய ஞானம். அறம் முதலிய மூன்றும் உலகியலாதலின் அவை பாச நிலையிற்றானே நிகழ்வவாயின. விளக்கால் அல்லது இருள் நீங்காதவாறுபோல, ஞானத்தால் அல்லது உலகியல் நீங்காமை பற்றி, ``மூன்றும் நடக்கின்ற ஞானம்`` என்றும், பதியைத் தொழுதலே தவம் ஆதலாலும், அத்தவத்தை உலகப் பற்றுடன் செய்யின் உபாயத் தவமும், பற்றற்றுச் செய்யின் உண்மைத் தவமுமாம். ஆதலால், உண்மைத் தவத்தாற்றானே ஞானம் உண்டாம் ஆதலாலும், ``தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின்`` என்றும், `தொழுதல் நியமமாதல் வேண்டும்` என்பார். ``நாடோறும் தொழுமின்`` என்றும் கூறினார். பதியைத் தொழுதலாகிய தவம், `சரியை, கிரியை, யோகம்` என மூன்று என்பதும், `அத்தவத்தானே பதிஞானம் உளதாம்` என்பதும் மேல் பல இடங்களில் கூறப்பட்டன. குடத்திட்ட விளக்கு, குன்றில் இட்ட விளக்கு` இருதொடராக்கி உரைக்க. ``அது`` என்றது, உபநிடத வழக்கு. `பதி` என்றவாறு. `குடத்தில் இட்ட விளக்காயுள்ள அது, குன்றில் இட்ட விளக்காம்` என்க. சாதன சாத்தியங்கள் தம்முள் இயைபிலாவாதல் கூடாமையின், தொழுவதும் பதியையேயாயிற்று.இதனால், `பதியால் பாசம் அறுக்கப்படுதல் இவ்வாற்றால்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage