
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
பதிகங்கள்

உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.
English Meaning:
Evolutes of BinduWhen Creation commenced,
From Para Bindu arose Kundalini
And from Kudilai the Vaindavam in the firmament vast
And the nine gods Brahma and the rest
And their Saktis
And in order corresponding
The Karanas, the Kalas and the sound Vaikari (Nada).
Tamil Meaning:
முழுப்படைப்புக் காலத்தில் முதற்கண் சுத்த மாயா காரியங்களே தோன்றும். அக்காரியம் வாக்குகளும், இறைவனது நவந்தரு பேதங்கட்கும் இடமாய் நிற்கும் சுத்த தத்துவங்களும் ஆகும். நவந்தரு பேதங்களை ஒடுக்க முறையில் வைத்து எண்ணினால் பிரமன் முதலியனவாக அமையும். புண்ணியம் காரணமாக இறைவனது அதிகார சத்தி பதிதலால் அப்பெயர் பெற்று நிற்கும் அணுபக்கத் தினரும் உளர். அது நிற்க. வேறு பிரமனாதியர்க்கும், மற்றும் நால்வகை வாக்கிற்கும், அனைத்துப் பொருள்கட்கும் இடமாய் நிற்பன பஞ்சகலைகள்.Special Remark:
`அந்தப் பஞ்ச கலைகளும் சுத்த மாயையினின்றே தோன்றும்` என்பது கருத்து. குண்டலியாவது எழுத்தோசையாகிய நாதமேயாம். குடிலையில்` என்பது, ``குடிலில் எனக் குறைந்து நின்றது. `விந்து, குடிலை என்பன ஒருபொருட் சொற்கள் எனினும் சில இடங்களில் குடிலை என்பது ஆகுபெயராய் அதன் காரியமாகிய வாக்குகளை உணர்த்தும். கதி - காரிய நிகழ்ச்சி. அதிகரணம் என்பது `கரணம்` எனக் குறைந்து நின்றது. அதிகரணம் - நிலைக்களம், குண்டலி` என்றது சூக்குமமாகிய காரண நிலையாகலின் பின்னர்த் தூல மாகிய வைகரியை வேறு கூறினார். ``வைகரி`` என்றது உபலக்கணம் ஆதலின் ஏனை மத்திமை பைசந்திகளும் கொள்ளப்படும். `கரணம் கலை` என்றதின் பின் `அவற்றில் வைகரி முதலியன நிற்கும் என உரைக்க. இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகளில் தோன்றும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. சுத்த தத்துவங்கள் ஐந்து எனப்படினும் அவை அனைத்தும் சிவ சத்தி பேதங்கட்கு இடமாகு மாற்றானே ஐந்தாய் நிற்றலின் நவந்தரு பேதங்களுள் பரநாத பரவிந்துக்கள், `அரன் அரி அயன்` என்பன ஆகிய பேதங்கட்கு உரிய அதிகரணங் களையும் வேறு வைத்து எண்ணி `வயிந்தவம் ஒன்பான்` என்றார். வயிந்தவம் - விந்துவின் காரியம். `அரன், அரி, அயன்` என்பவர் கட்குச் சுத்த வித்தையிலும், பரநாத பரவிந்துக்களுக்கு அபரநாத அபர விந்துக்களிலும் களம் உண்டு என்க. ``விதியிற் பிரமாதிகள் மிகு சத்தி`` என்றது பிராகிருதராய் நிற்கும் மூர்த்திகளை மேற்கூறப்பட்டவரோடு வைத்து மயங்காமைப் பொருட்டு, இடைப்பிறவரலாகக் கூறினார். `விதியின், மிகு சத்தியால் பிரமாதிகள் ஆவர்` என்க. விதி - புண்ணியம்.``விரைக்கம லத்தோன் மாலும் ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே``
எனவும்,
``அயன்றனை ஆதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்``
எனவும் சிவஞான சித்தி (சூத்திரம் -2-34,60) கூறுதல் காண்க.
நவந்தரு பேதங்கள் `திருவருள் வைப்பு` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டன.
இதனால் சுத்த மாயையாகிய விந்துவின் காரியங்கள் ஓராற்றல் தொகுத்துணர்த்தப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage