
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
English Meaning:
Lord (Sadasiva) is the Light of Life of GodsThe resplendent Brahma, Vishnu, Prajapati
The luminous Sun and Indra
The bright-eyed Devas swarming celestial Spheres
He indeed, is their Light of Life—
He the Being Uncreated.
Tamil Meaning:
அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக் கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.Special Remark:
``தற்பரம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. பிரமனால் அவனது படைத்தற்றொழிலை இயற்றப் படைக்கப் படுபவர், `உபப்பிரமாக்கள்` எனப்பட்டு, `பிரசாபதிகள்` எனவும் கூறப் படுவர். `தட்சப் பிரசாபதி` என்பது காண்க. தேவருள் சிறப்புடைய சிலரை எடுத்துக் கூறியவாறு. செவ்வேள் ஈற்றில் `இவர்தம்` என்பது தொகுத்தலாயிற்று. `கட்சுடர்` என்னும் நான்காவதன் தொகை எதுகை நோக்கி மெலிந்து நின்றது. அதன்கண் ``சுடர்`` என்றது இலிங்க வடிவினை. தேவர் யாவரும் லிங்க வடிவில் சிவனை வழிபடுதல் வெளிப்படை. ``கலந்தெங்கும்`` என்பதை இறுதியில் ``ஆம்`` என்பதனோடு இயைத்து முடிக்க. `அத்தேவர்கள்` எனச் சுட்டுவருவித்துக் கொள்க. சிவனது மூர்த்தம் நிறத்தால் பொங்கழலோடு ஒப்பதாயினும், வெப்பம் இன்றித் தட்பக் குணமேயுடைத்தாய் இருத்தல் பற்றி, `தண்சுடராய்` என்றும், வழிபடுவார் வழிபடும் இடங்கள்தோறும் அவர்க்கு அருள்புரியத் தோன்றுதலால், ``எங்கும் தண்சுடராய்`` என்றும் கூறினார். ``எங்கும் கலந்து ஆம்`` என்பதில் ஆதல் உளதாதல்.இதனால், `அவன் இலிங்கம் முதலிய கண்டப் பொருளாய்த் தோன்றினும் அகண்டப் பொருளேயாதலை நினைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. ``எங்கும் தண்சுடராய்`` என்றதனால் இலிங்க வடிவில் வழிபடுவார்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிதல் குறிக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage