
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.
English Meaning:
EXhalation Measure for Ages 80 and 60If Prana flows outward
To matra six in length,
Eighty the age you live up to;
If seven, sixty;
These two know clearly.
Tamil Meaning:
பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.Special Remark:
இடை நாடி வழியால் பிராண வாயு உட்செல்லின் உடல் வலிமை மிகும். அவ்வாறன்றி அவ்வழியே வெளிச்செல்லுமாயின், உடல் வலிமை குன்றும். ஒவ்வொரு முறையும் மூச்சு வெளிச்சென்று உட்புகும்பொழுது குறைந்தே புகுகின்றது என்பதுமேலெல்லாம் சொல்லப்பட்டது. அக்குறைவு வல நாசியின்வழி நிகழின் தீங்குமிக இல்லை. இடநாடியின் வழி நிகழின், தீங்கு மிகுதியாம். ஆகவே, கன்மத்துக்கு ஈடாகச் சிலர்க்குப் பிராண வாயு நெடுநேரம் வல நாசியின்வழி வெளிப்போதலும், சிலர்க்கு இடநாசியின்வழி நெடுநேரம் வெளிப்பேதாலும் உளவாகின்றன. அந்நிகழ்ச்சியைச் சரவோட்டம் அறியும் முறையாற் காணின், அவரவரது வாழ்நாள் எல்லையை அறிந்துகொள்ளலாம் என்பது கருத்து. இடை நாடி சத்தியை மிகுவிக்கும் வாயிலாதல் பற்றியே `சத்தி நாடி` எனப்படு கின்றது. அறியாமையால், உலகர் பிராண வாயுவை அது போகின்ற போக்கிலே விட்டிருப்பர். யோகியர் அதனைத் தம் வழிப்படுத்து முறைப்படி இயங்கச்செய்வர். அம்முறை, ``ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்`` (தி.10 பா.556) ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (தி.10 பா.558) ``வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே`` (தி.10 பா.561) என மேற்கூறப்பட்டது. இங்கும் வருகின்ற திருமந்திரத்துள், ``இடம் பெற ஓடிடில்`` எனக் குறிக்கப் படும். அதனால், ஏறுதல் இடநாடியின் வழி என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. ``தெளி இவ்வகையே`` என்றது சரவோட்டத்தின் பயன் முறையை விளக்கியவாறு. ``ஆறொரு பத்து`` என்னும் பெயர்ப் பயனிலை வினையின் இயல்பினதாய், ``எண்ணில்`` என்னும் எச்சத் திற்கு முடிவாயிற்று. `இவ்வாறாய் அமர்ந்த இரண்டையும்` என்க.இதனால், சர ஓட்டத்தால் வாழ்நாள் எல்லையை அறியும் முறை இரண்டு கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage