
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே.
English Meaning:
Importance of Nadi Suddhi for LongevityNone there the Jiva who practises Nadi Suddhi;
Breathing from left to right and right to left;
He who does it visions Sakti;
The senses five his way come;
To a hundred years, he sure lives.
Tamil Meaning:
இறைவன் கொடுத்த இடைநாடி பிங்கலை நாடி வழிகளைப் பயனுடையனவாகின்ற வகையில் சாதனை செய்பவர் உலகத்து அரியர். அந்நாடிகள் பயனுடையனவாய் விடின், அவற்றால் பஞ்சேந்திரியங்களும் தன்வழிப்படும். அவை தன்வழிப்பட்ட நிலையில் பின்னும் அச்சாதனையைச் செய்யின், அவ்வாறு செய் பவனது வாழ்நாள் நூறாண்டு அளவினதாய்க் குறைவின்றி நிற்கும்.Special Remark:
இடைநாடி பிங்கலை நாடிகள் பயனுடையன வாதல், அவை முறையே பிராண வாயுவை உள்வாங்குதற்கும், வெளி விடுதற்கும் உரியவாம் பொழுதாம். எனவே, அவற்றின் பொருட்டே அவை தரப்பட்டன என்க. ``ஆயிடில்`` எனப்பின்னர் வருதலின், வாளா, ``சாதிப்பார்`` என்றார். ஆதல், பயன்படுதல். `இடைநாடி பிங்கலை நாடிகள் இறைவனால் கொடுக்கப்பட்டனவாதலேயன்றி, அவை சத்தி சிவங்களாயும் நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``தையல் தலைவன் இடம் வலம்`` என்றார்; இது நிரல்நிறை. பின்னிரண்டி டத்திலும், `வலத்தால்` என உருபு விரிக்க. ``தன்வழி அஞ்சில்`` என அனுவாதகமாகக் கூறவே, அஞ்சும் தன்வழியவாதலும் பெறப்பட்டது. ``வழி`` இரண்டில் பின்னது, வாழ்நாளின் வழிமுறை.இதனால், வாயுவசம், இந்திரியவசம், யோக அனுபவம் மூன்றன் கூட்டம் நிறை வாழ்நாட்குக் குறியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage