
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
பதிகங்கள்

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.
English Meaning:
Divine Music in Yoga PracticeIn the body-temple where Sakti is seated
If you practise transference of breath from right to left and vice versa,
You can hear the mystic sounds from Forehead Centre
And Lord Siva will Himself reveal
Dancing to rhythmic music;
This we declare true
In the name of Sadasiva.
Tamil Meaning:
மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற்கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடு நாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும்பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.Special Remark:
முதலடி, மேல், ``மூன்று மடக்குடை`` என்ற மந்திரத்துட் கூறியதனை அநுவதித்தது. எனவே, இச்சாதனையால் குண்டலியின் இயக்கம் மிகுதல் பெறப்பட்டது. சகல நிலை `பகல்` எனப்படுதலின், சகல சாக்கிர நிலையை, `மத்தியானம்` என்றார். யோகாவத்தை யிலன்றிச் சகலாவத்தையில் தச நாதங்களைக் கேட்டல் அரிதாகலின், ``மத்தியானத்திலே வாத்தியங்கேட்கலாம்`` எனச் சிறந்தெடுத் தோதினார். இஃது உடம்பு சட ஆற்றல் மிக்கிருத்தற்கு அறிகுறியாகும். `தித்தித் தா` என்னும் ஒலிக் குறிப்பினை, ``தித்தித்த`` எனக் குறுக்கி ஓதினார். அஃது இரட்டுற மொழிதலாய் நின்று, கூத்து, அருள் இன்பக் கூத்தாதலை உணர்த்திற்று. கூத்து, கருவியாகுபெயர்; என்னை? சிவனின் வேறாக ஓதப் பட்டமையின் சிவன், தடத்த சிவன். ``வெளி ப்படும்`` என்பதனைத் தனித் தனி இயைக்க. ``சொன்னேன்` என்பதும் பாடம்.இதனால், இரண்டாவதாகிய குண்டலியின் இயக்கம் திருவருட் பேற்றிற்குச் சிறந்ததாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage