
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
பதிகங்கள்

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.
English Meaning:
Purification of Internal Organs of BodyIf the breath is used to flush the Ida and Pingala
By Pranayama, the heart gets purified
And the body becomes impervious
Even to fire.
Tamil Meaning:
பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறை யறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திர மையாய் அமையும்.Special Remark:
``சுழற்றிக் கொடுக்க`` என்பது ஒரு சொல் நீர்மைத்து. `கொடு` என்பது செயப்படுபொருள் குன்றாவினையில் இவ்வாறு துணைவினையாய் வருதலை, `கிண்டிக் கொடுத்தல், புரட்டிக் கொடுத்தல்` முதலாகவரும் வழக்குநோக்கி அறிக. `சுத்தி` என்பது பாடமன்று. ``மலம்`` எனப் பின்னர் வருதலின்` வாளா,``கழியும்`` என்றார், ``உழற்றிக் கொடுக்கும்`` என்பதில் உழலுதற்கு இடமும், கொடுத்தலுக்குச் செயப்படுபொருளும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. உழற்றிக் கொடுத்தலையே உபாயம் என்கிறாராதலின், ``கொடுக்கும் உபாயம்`` என்பதில், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். `அழற்றப்படுவது` என்னும் பொருளதாய ``அழற்றி`` என்பது இங்கு அன்னதாம் தன்மையைக் குறித்தது. மந்திர மை, புதையுண்டு கிடக்கும் பொருட்குவை முதலியவற்றைப் புலப்படக் காட்டுதல் நன்கறியப்பட்டது.இதனால், காயசித்தி உபாயங்களுள் முதல் உபாயம் பிராணாயாமம் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage