
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
பதிகங்கள்

அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
English Meaning:
Effect of Practising Yoga at Dawn, Noon and DuskAs body wax-like suppleness attains,
Practising yoga at dusk
The phlegm leaves;
At noon leaves the wind that is treacherous;
At dawn practised, the bile leaves;
Thus all poison from body is expelled
And you shall know no greying, nor wrinkling.
Tamil Meaning:
மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாதவாறு, `ஐ, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாராதொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.Special Remark:
போல் உடல், வினைத்தொகை. `போன்றுடல்` என்பது பாடமன்று. `உடற்கண்`` என ஏழாவது விரிக்க. ``வஞ்சகம், செய்திடில்`` என்பவற்றை ஏனையவற்றிற்கும் கூட்டுக. ``ஐ, வாதம், பித்து`` என்ற மூன்றும் காரண வாகுபெயராய், அவற்றால் உளவாகும் நோய்களைக் குறித்தன; என்னை? அற்றொழியற்பாலன அந் நோய்களே யாதலின். காலைப் பொழுது எச் செயலுக்கும் சிறப்புடைய தாகலின். அதனை ``செஞ்சிறு காலை`` என்றார். செய்தலுக்குச் செயப்படுபொருள், அதிகாரத்தால் வந்தது. ``நஞ்சறச் சொன்னோம்`` என்பதனை ஈற்றில் வைத்து உரைக்க. ``நரை, திரை நாசம்`` என்றதனால், இளமைநீங்காமை குறிக்கப்பட்டது. இதனைக் காலம் வரையாது கூறினமையின் `எக்காலத்தும் செய்தலால்` என்றதாயிற்று.இதனால், மேற்கூறிய உபாயத்தைச் செய்யுமாறும், அவற்றால் வரும் பயன்களும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage