ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

English Meaning:
Importance of Preserving Body

If the body perishes, the soul that possesses it will also cease to function as if it has perished. Therefore, after the body is destroyed, the soul that relied on that body will not be able to attain divine consciousness or the aid of penance. In this context, I, who knew the way to preserve the body and did so, have ensured the well-being of the soul.
Tamil Meaning:
உடம்பு அழிந்தால், அதனைத் தனதாகக்கொண்டுள்ள உயிரும் அழிந்ததுபோல செயலிழக்கும். ஆகவே, உடம்பு அழிந்த பின், அந்த உடம்பை நம்பி இயங்கிய உயிர், தவத்தின் துணையைப் பெறவும், இறையுணர்வை அடையவும் இயலாது. இதற்காக, உடம்பை நிலைபெறச் செய்வதற்கான முறையை அறிந்து அதை நிலைபெற்றவாறு செய்த நான், உயிரின் நலனைப் பெற்றிருக்கிறேன்.
Special Remark:
``ஆகவே, என்னை உடம்பையே பொருளெனக் கொண்டவனாகக் கருதி அறிவுடையோர் இகழார்` என்பது கருத்து. எனவே, ``நீவிரும் உடம்பை நிலை பெறுவிக்க முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உடம்பார், உயிரார்`` என்றவை, நிலையாமை யுடைய இழிவு பற்றி வந்த திணை வழுவமைதி. இதனை, ``உயர்வு பற்றி வந்தது`` என்பாரும் உளர்;, ``அழியின் `` எனவும், ``அழிவார்`` எனவும் அழிபொருளாகக் கூறப்பட்டவை, உயர்வுடையனவாதல் எவ்வாறு என எண்ணி ஒழிக. திடம்படல், உறுதி யுண்டாகப் பெறுதல், ``உயிர்க்கு உறுதி`` என்றது, இங்குத் தவத்தை, ``திடம்பட`` என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இனி, ``சேரவும்`` என்னும் எண் ணும்மையைச் சிறப்பும்மையாக வைத்து, ``திடம்பட`` என்பதனைச் சேர்தற்கு அடையாக்கியே உரைப்பர் பலரும். உடம்பை வளர்க்கும் உபாயம், வருகின்ற திருமந்திரம் முதலாக உள்ளவற்றிற் கூறப்படுவன. ``வளர்த்தேன்`` இரண்டில் முன்னது வினைமுற்று. அதன்பின், ``அதனால்`` என்பதும் இறுதியில், ``ஆயினேன்`` என்பதும் எஞ்சி நின்றன.
இதனால், காயசித்தி இன்றியமையாமையாதற்குக் காரணம் உணர்த்து முகத்தால், அதன் சிறப்புக் கூறப்பட்டது. இதனானே, உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகக் கொள்ளுதலல்லது, அதனையே பயனாகக் கொள்ளுதலும், உடம்பு கருவியாதலை உணராது அதனைப் பகை எனக் கொண்டு வருத்துதலும் ஆகா என்பதும் பெறப்பட்டன.