
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
பதிகங்கள்

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.
English Meaning:
The Five Letters are the Life`s RefugeWhen the seven beams of Prana in fury rise,
When the four cognitive senses, their leave take,
And as Death`s Hand stretched and seizes,
Life ebbs away;
Then shall the Five Letters above the Soul`s refuge be.
Tamil Meaning:
``தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.(திருமுறை - 7-7-2) என்றபடி பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை எய்திய மக்களின் உடம்பை உறவினரும், ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அவ் எரி, ஏழுவகையான கதிர்கள் மிக்குத் தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் பருவுடம்பில் எஞ்சி நின்ற `தனஞ்சயன்` என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவனவாகும். அவையும் நீங்க உயிர் நுண்ணுடலோடு வினைக்கீடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்புவரினும், உயிர் செய்த பெருந்தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே.Special Remark:
`நெருப்பிலும், ஞாயிற்றிலும் ஏழுவகையான ஒளிக் கதிர்கள் உள்ளன` எனவும், `அந்த ஏழு கதிர்களே பகலவன் தேரில் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன` எனவும் இக்கால அறிவியலார் கூறி விளக்குவர். அதனை நாயனார் முன்பே, ``கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கி`` எனக் கூறினார். கரணங்கள் - கருவிகள். ``விட்டு`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது. ``எரி பொங்கி`` என்றதனால் `இயற்கை மரணம்` என்பது போந்தமையின், பின்பு ``மரணம்`` என்றது, அகால மரணத்தையாயிற்று. இரு நிலைகளிலும் அஞ்செழுத்துப் பாதுகாவலைத் தருதலாவது, உயிர், சுவர்க்க நரகங்களில் புகாது, சிவலோகத்தை அடைவித்தல். சிவலோகத்தை அடைந்த உயிர் ஏனை உயிர்கள்போல மீள இவ்வுலகத்தில் வந்து பிறத்தல் நியதியன்று. பிறக்கினும் ஞானத்திற்கு உரியதாகவே பிறக்கும். `அந்நிலையைத் தருவது ஐந்தெழுத்து` என்றபடி.இதனால், பிறப்பை நீக்குவது ஐந்தெழுத்து மந்திரம் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage