
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
பதிகங்கள்

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
English Meaning:
Tamil Meaning:
அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?Special Remark:
ஈற்றில் வருவித்து உரைத்தது `உணர்த்தரிது` என எஞ்சி நின்ற சொல்லெச்சம் பற்றி. ``கண்டீர்`` மூன்று தொடர்ப் பொருளை வலியுறுத்தி நின்ற முன்னிலையசைகள். ``உலகு`` இரண்டில் பின்னது உயிர்த்தொகுதி. நன்றாவது ஞானம். அதனைத் தருவதனை ``நன்று`` என உபசரித்துக் கூறினார். இனித் தின்று கண்டேன் என இயையும். இனி - இப்பொழுது.இதனால், `ஞானத்தைத் தருதல் பற்றி மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரம் `என்பதும், அது நகாரம் முதலாக அமையின் தூல பஞ்சாக்கரமாம்` என்பதும் சொல்லப்பட்டன. இதனைப் பிரணவத்தோடு கூட்டிக் கூறின தூல சடாக்கரமாம்.
வடமொழி `ம` என விசர்க்க ஈறாய் நின்று முப்பதாம் மெய்யோடு புணருங்கால், விசர்க்கம் அம்முப்பதாம் மெய்யாகத் திரிந்து வருதல் பற்றித் தமிழில் நமச்சிவாய` எனச் சொல்லப்படும். அவ்வாறாயினும் வடமொழியிலாயினும், தென்மொழியிலாயினும் மெய்யெழுத்து எண்ணப்படாமையின், எழுத்து ஐந்தேயாம். `நமசிவாய` என்றல் யந்திர முறையாகிய கிரியா மார்க்கமாம். திருமுறைகளில் எல்லாம் ஞானமார்க்க முறையாகிய `நமச்சிவாய` என்றே சொல்லப்படும். திருமுறைகளில் பெரும்பான்மையாக இத்தூல பஞ்சாக்கரமே எடுத்தோதப்படுதல் வெளிப்படை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage