
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
பதிகங்கள்

அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.
English Meaning:
Seek the Seminal Mantra Nama SivayaIn the sixteen letters commencing with ``A``
(Of the Shodasa Flower within)
Is the Parai (Sakti);
In the Unmani Sakti beginning with ``U``
Is the light of Lord within;
The Mantra commencing with letter ``Si`` (Sivaya Nama)
Is Siva and Vedas all;
With letter ``Na`` commencing
That order reversed
Is Nama Sivaya;
That verily is the seminal Mantra;
That Mantra do seek.
Tamil Meaning:
`ஐம்பது` அல்லது, `ஐம்பத்தொன்று` எனப்படும் அகரம் முதலாகிய எழுத்துக்களில் பதினாறு வகையாய்ப் பராசத்தி நிறைந்து நிற்கும். (பதினாறாவன சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, இரோசிகை, மோசிகை, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை` என்பன.அந்தச் சத்தியைக் குறிக்கும் பெயர் உகாரத்தை முதலாக உடையது `உமா, என்பது (இஃது உ, ம், அ என்பது கூட்டாக இருத்தலால், `சத்தி பிரணவம்` எனப்படும்.) சத்தி ஒளியாய் நிற்க. அதற்குப் பற்றுக் கோடான சுடராய் உள்ளார்ந்து நிற்பவன் சிவன் முன் மந்திரத்திற் கூறிய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய், `பதி, பசு, பாசம்` என்னும் மூன்றையும் உணர்த்தும், ஆகவே, முன் மந்திரத்திற் கூறியவாறு நகாரத்தை முதலாகக் கொண்ட ஐந்தெழுத்தாலாகிய அந்த மந்திரமே அனைத்து மந்திரங்கட்கும் மூல மந்திரமாம் தகைமையை உடையதாகும்.
Special Remark:
அகாராதி - அகரம் முதலாகிய எழுத்துக்கள். `அகாராதியில்` என உருபு விரிக்க. `பரையாம் தன் சத்தி உகராதி` உகாராதி - உகரத்தை முதலாக உடைய மந்திரம் என மாற்றியுரைக்க. ``உள்ஒளி`` என்பது, `ஒளி உள்` என்பது பின் முன்னாக மாறி நின்ற ஆறாவதன் தொகை. ``உள்`` என்பது ஆகுபெயராய் உள்ளார்ந்து நிற்கும் பொருளைக் குறித்தது. ஐந்தெழுத்து மந்திரத்தில், `சிவா` என்பது பதியையும் `ய` என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். அவற்றுள்ளும் சிகாரம் சிவனையும், வகர ஆகாரம் அவனது அருட் சத்தியையும் குறிக்கும். `நம` என்பதிலும் மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்கும். இவற்றையெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலிய நூல்களில் காண்க. ஏதம் - குற்றம்; பாசம். கோணம் - வளைவு. இரு பக்கமும் வளைந்து சென்று பாசத்தோடும், பதியோடும் பற்றும் தன்மையுடையது பசு, மந்திரம்` என்றது, மூல மந்திரமாம் தன்மையை.இதனால், முன் மந்திரத்தில் ``நந்திதன் நாமம்`` எனக் கூறிய நகாராதி ஐந்தெழுத்தால் ஆகிய மந்திரம் ஏனை மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமாதற்குக் காரணம் விளக்கிக் கூறப்பட்டது. அதனோடே அக்கரங்கள் எல்லாம் சத்திமயம் ஆதலும் உடன் இணைத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage