
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பதிகங்கள்

ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.
English Meaning:
The Eight-Petalled Bloom is Dear to SivaThere on the lofty top of Mount (Meru) within
Is a pond no stream feeds;
And there is a lotus bloom
From no soil mud springs;
Without that bloom,
He decks not Himself
He of matted locks.
Tamil Meaning:
சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்குமேலே, தனக்கு வருவாயாகும் நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ் நிலங்கட்குப் பாய விடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேறும், கிழங்கும், இல்லாமலே செழிப்பான ஒரு கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களைச் சிவன் விரும்பிச் சூடுதல் இல்லை.Special Remark:
ஊறும் அருவி, விந்துத் தானத்தில் உண்டாகின்ற அமிர்ததாரை. அதனை உடைய உயர் வரை, ஆஞ்ஞை; புருவ நடு. அதற்கு மேலேயுள்ள அருங்குளம் உச்சி. அது `சந்திர மண்டலம்` எனப்பட்டு, சந்திரன் தருகின்ற அமிர்தத்தைப்போல அமிர்தத்தைத் தருதலால், `ஆறின்றிப் பாயும் அருங்குளம்` எனப்பட்டது. ``உண்டு`` என்பதன்பின், `அதன்கண்` என்பது வருவிக்க. செழுங்கொடி, ஆஞ்ஞையினின்றும் மிடற்றினின்றும் உச்சிக்குச் சென்று பரவும் நாடிகள்; நரம்புகள் பூத்த தாமரை, உச்சியில் மலர்கின்ற ஆயிர இதழ்த் தாமரை. அதனையே சிவன் விரும்பிச் சூடுதல், அத்தாமரையினின்றும் தோன்றும் யோகக் காட்சிகளையே ஆஞ்ஞையில் தன்னைத் தியானிக்கும் யோகிகட்குத் தான் வழங்கும் பிரசாதமாகக் கொண்டிருத்தல் இம்மந்திரமும் மேற் போந்த சில மந்திரங்களை போலப் பிசிச்செய்யுள். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.இதனால், அட்ட தள கமல வழிபாட்டிற்குமேல் யோக வழிபாடும் செய்யத் தக்க சைவ வழிபாடாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage