
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.
English Meaning:
All Creation is Sakti-Siva PlayAll the Universe is the play of Sakti-Siva
Sakti is Siva, and Siva is Sakti
Without Sakti and Siva is no manifest creation
It is Sakti and Siva that forever Form assume.
Tamil Meaning:
உலகமே ஆதி சிவனது விளையாட்டாம். அவன் ஆதி சத்தியைக் கொண்டே அனைத்தையும் செய்வனாயினும் அச் சத்தியும், அவனும் உலகத்துத் தலைவியரும், தலைவரும் போல வேறு வேறானவர் அல்லர். சத்தியே `சிவனும்` சிவனே சத்தியும் ஆவர். எனினும் சில வேறுபாடு பற்றி, சத்தி எனவும், `சிவன்` எனவும் பிரத்து வழங்கப்படுகின்றார்கள். அதனாலே இலிங்கத்திலும் அவ்வேறுபாடு காணப்படுகின்றது. அஃதே பற்றி, அதனை, `உலகத்தாரது உருவம் போல இருவேறு பொருள்களின் கலப்பு` என மயங்கற்க. இனி உண்யைாக உணர்ந்தால், சத்தியே அனைத்துத் திருமேனிகளுமாய் நிற்கும்.Special Remark:
`தாரணி` என்பது `தாங்குவது` என்னும் பொருட்டாய் நிலத்திற்கு, பெயராகும். அத்தகைய நிலமாவது மண்ணிலம் மட்டு மின்றிப் பொன்நிலம் முதலியனவும் நிலமேயாதலின், ``தாரணி`` என்றது எல்லா உலகங்களையும் குறித்தது. அவற்றைச் சிவனது விளையாட்டு என்று, மேலைமந்திரத்திற் கூறியவாறே உபசாரமாம், ``விளையாட்டாம்`` என மேற்கூறியதனையே இங்கு மீட்டுங் கூறியது, மேற்கூறிய உயிரேயன்றி, `ஏனைப் பொருள்கள் பலவும் அத்தகை யனவே` என்பது உணர்த்துதற்கு. மேல், சிவனை, ``எந்தை`` எனவும், சத்தியை, ``என்னம்மை`` எனவும் கூறியதனால், அவ்விருவரும் `உலகத்துத் தந்தை தாயரைப் போல வேறுவேறானவர் போலும்` என மலையாமைப் பொருட்டு, சத்தியே சிவனும் ஆவாள்; சிவனே சத்தியும் ஆவான்` என விளக்கிக் கூறினார். `விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்`` என ஆத்துமலிங்க அதிகாரத்தில் கூறிய குறிப்பின்படி இலிங்கமும் ஒருபெற்றித்தாய் இராமல் இருவேறு வகையாய்க் காணப் படுதலால் அதுபற்றியும் மேற்கூறியவாறு மலையாமைப்` பொருட்டு, ``தாபரம் வேறில்லை`` என்றார். `இச்சத்தி சிவனன்றி` எனச்சுட்டு வரு வித்து, `தாபராம் இத்தன்மையராகிய சத்தியும் சிவனுமேயன்றி வேறில்லை` என உரைக்க. `தாபரமும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `திருமேனிகள் எல்லாவற்றிலும் சத்தி மூர்த்தியாய் நிற்கச் சிவன் மூர்த்திமானாய் நிற்பன்` என்றற்கு, `திரு மேனிகளில் சில சிவனது வடிவமே` என்றும், சில இருவரும் ஒன்றாய் இயைந்த வடிவம் என்றும் எண்ணுமாறு நிற்றல், கடவுட் பொருள் ஒன்றேயாயினும், அஃது இருதன்மையை உடையது` என்பதைக் குறித்து நிற்கும் அடையாளம் ஆதலேயனஅறிப் பிறிதில்லை` என்றதாயிற்று.``வேர்த்து வெகுளார்`` * என்பதனை, `வெகுண்டு வேரார்` என முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் போல, ``சமைந்துருவாகும்`` என்றதை, `உருவாகிச் சமையும்` என மாற்றிக் கொள்க. இதற்குப் பகலவன் ஒருவனே `கதிரவனும், கதிரும்` என இருதன்மையை உடையனாய் இருத்தலை உவமையாகக் கூறுவர்.
சத்தி சிவனது இயல்பினை இங்குக் கூறியவாறே,
``அருளுண்டாம் ஈசற்(கு) அதுசத்தி, அன்றே;
அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று)
அவன்அன்றே யில்லை; அருட்கண்ணார் கண்ணுக்(கு)
இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து`` *
எனவும்
``அருளது சத்தியாகும் அரன்றனக்(கு) அருளையின்றித்
தெருள்சிவம் இல்லை; சிவம்இன்றிச் சத்தி யில்லை``
``சத்திதான் நாதமாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதா னாதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமுமாகும்`` l
எனவும் கூறப்பட்டன.
இதனால், மெய்ப்பொருளது தன்மையினை இங்ஙனம் உள்ளவாறுணர்தலே ஞானலிங்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage