
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.
English Meaning:
Seek SadasivaHe is the Lord of the Immortals,
He is the Lord with Faces in directions all,
He is the Lord of Four (Brahma, Vishnu, Rudra and Mahesa)
He is Nandi that central stands;
They who adore Him as their Lord
Themselves His ways attain;
Do you, so, seek the Lord`s Holy Feet.
Tamil Meaning:
மேற்கூறிய நவந்தரு பேதங்களில் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் பேதங்களை ஏனைத் தேவர்போல எண்ணுதல் கூடாது` என்றற்கு அவற்றது சிறப்புணர்த்துவார், `அருவுருவத் திருமேனியும் தனியொரு நிலையது ஆனமை பற்றி இகழ்தல் கூடாது` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.Special Remark:
``தேவர்பிரான்`` என்றது உருத்திரனை. என்னை? அவனோடு ஒத்த உருவும், பெயரும், தொழிலும் உடையவன் தேவர்கட்குப் பிரானாய் நிற்றல் வெளிப்படையாதலின், திசைமுகம் - திக்கின் பகுதி. அவை எட்டாதலின் அவை போல எண்மராய் நிற்கும் வித்தியேசுரரை, ``திசைமுகர்`` என்றார். இவருக்குத் தலைவன் மகேசுரன். சதாசிவ மூர்த்தி தனக்குக் கீழ் உள்ள நால்வர்க்கும் மேலானவன் ஆதல் பற்றி ``நால்வர் பிரான்`` என்றும், அவன் காணாத அருவினர்க்கும், காணப்பட்டே நிற்கும் உருவினர்க்கும் நடுநிற்கும் சிறப்புப் பற்றி ``நடுஉற்ற நந்தி`` என்றும் கூறினார்.`அவ்வழியால்` என `ஆல்` உருபும், `அடிக்கண்` எனக் `கண்` உருபும் விரிக்க. `அண்ணலும் அவர் ஆம்` என ஒரு சொல் வருவிக்க. `பிரான் என்று யாவர் இறைஞ்சுவார்` என்பதனை முன் இரண்டோடும் தனித் தனிக் கூட்டிப் பின்பு, நேரே உரைக்க.
இதனால் `ஆன்மாவினது ஞானம் உண்மைப் பதிஞானம் ஆமாறு கூறும் முகத்தால், அஃதே உண்மை ஞான லிங்கம் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage