
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.
English Meaning:
Sadasiva dispenses Divine JusticeThe Primal Lord is He,
The God of the Universe is He;
God is He whom the illumined devotees praise;
Great God is He of Justice Divine;
The Pure is He my Lord;
As half-and-half in Para Sakti He is.
Tamil Meaning:
மெய்யுணர்வினை உடைய அடியவர்களால், `யாவர்க்கும் முன்னே மேலே உள்ளவன்` எனவும், அனைத்து உலகங்கட்கும் முதல்வனாகிய முழுமுதற் றன்மை உடையவன்` எனவும், `நீதியின் உள்ளே விளங்குகின்ற பெரியோன்` எனவும், `இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்` எனவும் கொண்டு வழிநின்று போற்றுகின்ற பெருமையை உடையவன் எங்கள் கடவுள். அவனை அறிதற்கு உரிய அடையாளம் மாதொரு பாகனாய் இருத்தல்.Special Remark:
`இவ்வாறு உணரும் உணர்வே ஞான லிங்கமாம்` என்றவாறு. ``சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்`` என்பதை அதற்குரிய காரணங்களுடன் விளக்கி, `அத்தெய்வமாவான் சிவபெருமானே` எனக் கூறுதலே கருத்தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.``அண்டம்`` என்றது, `அகிலாண்டம்` என்றவாறு ``அண்டத்துக்கு`` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ஓரிடத்தும், `தெய்வம்` என வாளா கூறாது, ``பரதெய்வம், நற்றெய்வம், பெருந்தெய்வம், மாத்தெய்வம்`` - எனச்சிறப்பித்தே ஓதியது `தெய்வம்` என்பது முதற் கடவுளையே உணர்த்தி நிற்றற் பொருட்டு. ஈற்றடியில் உள்ள சொற்களை, `தன்பாதியுள் பராசத்தி மன்னும் ஆம்` என இயைத்து `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. ஆம், அசை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage