
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.
English Meaning:
Lord is BounteousAs Form, the Formless and Form-Formless
Thus is Parasiva in all life immanent;
As Guru, too, He stands;
Unto the Kalpaka tree He bounties bestows
He, the Sadasiva.
Tamil Meaning:
யாதோர் உருவும் இலனாகிய பரமசிவன், தன்னைப் போலவே நிலைபெற்ற பொருளாய் உள்ள பல உயிர்களின் பொருட்டு, `உருவம், அருவம், உருஅருவம்` என்னும் திரு மேனிகளைப் பொருந்தி நிற்பான். அஃதேயன்றிப் பக்குவான்மாக்கள் பொருட்டுக் குருவாகி வந்து அவர்களோடு உடன் உறையும் கொள்கையையுடைய, கற்பகத் தருவைப்போல அவர்கள் வேண்டியவற்றை வழங்குகினஅற சதாசிவ மூர்த்தியும் ஆவான்.Special Remark:
`பதிப்பொருளாகிய சிவனை இவ்வியல்பினனாக உணர்தலே சிவஞானம்` என அதன் இயல்பு உணர்த்தும் முகத்தால் ஞானலிங்கத்தின் இயல்பைத் தொகுத்துக் கூறியவாறு.``குருவும்`` - என்னும் உம்மை இறந்தது தழுவியதனோடு உயர்வு சிறப்பு. இதனை, ``சதாசிவன்`` என்பதனோடு கூட்டுக. ``ஆகும், நல்கும்`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``சதாசிவன்`` என்னும் ஒருபெயரைக் கொண்டமையால், ``ஆகும்`` என்பதை வினையெச்சமாக்கி உரைக்கப்பட்டது. ஐந்தொழில்களில் அருளலைச் செய்தல் சதாசிவ மூர்த்தியாகியேயாதலால், ``குருவென நிற்கும் கொள்கையனாகும் சதாசிவன்`` என்றார். இதன்பின் `ஆம்` என்பது எஞ்சி நின்றது. தான், ஏ அசைகள்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage