
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
பதிகங்கள்

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.
English Meaning:
Worship Siva-Sakti and Realize JnanaThe Lord, my Father
His Sakti-Cluster, my Mother,
Chant their name in order according
That verily is Jnana Divine;
Above the navel, in my heart,
There with Her He resides
In rapture unceasing.
Tamil Meaning:
தன்னையே அடைக்கலமாக அடைந்த எனக்குத் தந்தையாய் நிற்கும் பரமசிவனையும் அவன் எனக்குத் தாயாய் நிற்கும் சத்தியோடு கூடிய கூட்டு நிலையையும், ஞானாசிரியர் தம் மாணாக் கர்க்கு முதற்கண் சுட்டளவாக உணர்த்திப் பின்பு அவ்விருவரது முறைமையை எல்லாம் விளங்க உணர்த்துவாராயின், மாணாக்கர்க்கு உண்மை ஞானம் பிறக்கும். எனவே, (`அதுவே அவர்க்கு ஞானலிங்கமாய்ப் பயன் தரும்` என்றபடி) இனி என் அப்பன் என் அம்மையை மக்களது இருதய கமலத்தில் இருக்க வைத்துத் தானும் அந்த இடத்தையே விரும்பி அவளோடு கூடி யிருக்கின்றான். ஆகவே, அவ்விருவரும் வீற்றிருக்கின்ற இடம் அதுவே.Special Remark:
`ஆதலின் மக்கள் அவ்விடத்து அவனை ஞான லிங்கத்தில் காண்க` என்பது குறிப்பெச்சம். `பரமனையும், கூட்டத்தையும்` என இரண்டாவது விரித்துரைக்க. ``என் அம்மை கூட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் ``பரமன்`` என்றது அவன் தனித்து நிற்கும் நிலையையாயிற்று. அஃது அவனது சொரூப நிலையும், அம்மையோடு கூடிய கூட்டம் அவனது தடத்த நிலையும் ஆகும் சொரூப சிவனே `பரசிவன்` என்றும் சொல்லப்படுவான். தடத்த சிவன் `சிவன்` என்றும், `ஆதிசிவன்` என்றும் சொல்லப்படுவான். சத்தியை விட்டுச் சிவன் ஒருபோதும் தனித்து நிற்றல் இல்லை யாயினும், செயல்யாதும் நிகழாதபோது சத்தி இருந்து இல்லாதது போல நிற்றலின் அந்நிலை `சிவனது தனிநிலை` என்றும், செயல் நிகழும் போது சிவன் செய்பவனும், சத்தி அவன் செயலுக்குத் துணையுமாய்ப் பிரிப்பின்றி நிற்றலின் அந்நிலை, `சிவனும், சத்தியும் கூடிய கூட்டு நிலை` என்றும் சொல்லப்படுகின்றன.``ஓருரு வாயினை; மானாங் காரத்(து) ஈரியல் பாய்`` *
என்று அருளிச் செய்தது இவை பற்றியே.
சிவன் பரசிவனாய் நிற்கும் பொழுது சத்தி பராசத்தியாய் நிற்பாள். அவளே அருட்சத்தி. சிவன் ஆதிசிவனாய் நிற்கும்பொழுது சத்தி ஆதிசத்தியாய் நிற்பாள். அவளே திரோதான சத்தி. அவள் வழியாகவே இறைவனது ஐந்தொழில்கள் நிகழும். இதுபற்றி அருணந்தி தேவர்,
``அவளால் வந்த ஆக்கம் இல்வாழ்க்கை யெல்லாம்`` l
என அருளிச் செய்தார். இவற்றையெல்லாம் இனிதுணர்த்தலே ஞானோபதேசமும், அங்ஙனம் உணர்த்தியவாறே உணர்தலுமே ஞானம் ஆகலின், ``முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்`` என்றார். உரைத்தற்கும் சொல்லுதற்கும் உரியவராகிய `ஞானாசிரியர்` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``சந்தித்திருந்த இடம்`` என்பதற்கு, எஞ்சிநின்ற `அது` என்னும் பயனிலையை வருவித்து இறுதியில் கூட்டியுரைக்க. ``உந்திக்கு மேல் என்றது இருதயத்தை. இதனை மூன்றாம் தந்திரத்துள்,
``நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்`` 3
என்றார். `உந்தியின் மேல்` என்பது பாடம் அன்று.
இதனால் ஞான லிங்கத்தின் இயல்பும், அந்த இலிங்கத்தைப் பெறும் முறையும், பெற்றுப் பயன் அடையும் முறையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage