
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே.
English Meaning:
I shall hold fast unto NandiWith love and yearning, I seek my Nandi,
Seeking Him, as Siva the Supreme, I will meet Him;
And then will I catch hold of His valorous Feet
And for ever hold to them,
Until He liberation grants.
Tamil Meaning:
நாட்டில் உள்ளார் பலரோடும், மற்றும் எனக்கு உற்றாராய அவரோடும் அளவளாவி, `எங்கள் சிவபெருமான் யாண்டுளன்` என்று தேடுவேன்; அத்தேடுதலுக்கு அவன் அகப்படா தொழியான் ஆதலின், அவன் அகப்பட்ட இடத்தில் `சிவபெருமான் கிடைத்தான்` என்று மகிழ்ந்து அவனோடு சேர்வன். சேர்ந்தபின் என் உயிர் பிறவிடத்தன்றி அவனது திருவடியிலே சென்று சேர்தற் பொருட்டு இந்த உடம்பு அழியும் வரையில் அவனை விடாதே பற்றிக்கிடப்பேன்.Special Remark:
`நீவிரும் அவ்வாறு செய்ம்மின்` என்பது குறிப்பெச்சம். ``நாடு`` என்றது அதில் உள்ளாரையும், ``உறவு`` என்றது அதனை உடையாரையும் குறித்தன. `நாட்டோடும், உறவோடும்` என உருபு விரிக்க. அளவளாவுதல் சிவன் இருக்குமிடத்தை அறிதற்கு.``தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை`` **திருவாசகம் - திருச்சதகம் 31
எனவும்,
``வியந்தாங்கலறித் - தேடிற்றிலேன்
சிவன் எவ்விடத்தான் எவர்கண்டனர் என்று`` 3
எனவும் ஆளுடைய அடிகள் அருளிச்செய்தமையும் காண்க. ``சிவபெருமான்`` என்பதற்கு முன்னும், பின்னும் `கிடைப்பின், கிடைத்தான்` என்னும் சொற்கள் எஞ்சிநின்றன வீடுதற்கு வினைமுதல் உடலாதல் வெளிப்படை. உடம்பு உள்ள காலத்து அதன்வழிப்பட்டு வேறொன்றைப் பற்றியிருப்பின் அதுநீங்குங்காலத்து உயிர்முன் பற்றியிருந்த பொருளையே அடையுமாகலானும், அவ்வாறன்றி அக்காலத்தில் இறைவனையே பற்றியிருப்பின் அது நீங்கியபொழுது உயிர் அவனையே அடைந்து விடும் ஆகலானும், ``வீடு மளவும் விடுகின்ற லேனே`` என்றார். நாயனார் சிவனை விடாது பற்றி நின்றவரேயாதலின், ``தேடுவன்`` என்றும், ``தேடிக்கூடுவன்`` என்றும் கூறியது, `விட்டொழிவேமோ` என்னும் அச்சத்தால், `ஒருகால் விடநேரினும் மீளவும் விரையப் பற்றுவேன்` என்றதாக உரைக்க. என்னை?
``பெறாஅமை அஞ்சும்; பெறிற்பிரி வஞ்சும்;
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு``*
என்பது காதலர் இயல்பாதலின்.
இதனால், `சிவபிரானது திருவருளை வேண்டுவார் அஃது ஒன்றையே நாடி முயலுதலும், முயன்று பெறின் பின்னர் விடாமையும் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage