
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
பதிகங்கள்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
English Meaning:
God Grants His Grace of HimselfAt the hour ripe He of Himself appears
And blesses you with His Grace;
A Benevolent Force, He stands as the soul of our souls.
Still standing by you, He ends your birth to be,
Lo! He stood before me, and bestowed Mukti on me.
Tamil Meaning:
அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன், இருவினை நீங்கிய காலத்து அங்ஙனம் நீங்கப் பெற்றார்க்கு யாதானுமோராற்றல் கண்முன் நின்றே அருளை வழங் குவன். வினையில்லாத நன்மை பொருந்திய குழாத்தினர்க்கு உயிர்க் குயிராய் இருந்தே அருளை வழங்குவன். யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்அருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பன்; அப்பாதுகாப்பின் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.Special Remark:
நாற்றோள் முதலிய தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவை களைச் செய்தல் இரண்டையும், `முன்னின்று அருளுதல்` என ஒன்றாக அடக்கினார். இவை இரண்டும் முறையே `பிரளயாகலர், சகலர்` என்பவர்க்கு அருளும் முறையாக ஆகமங்கள் வரையறுக்கும். முடி தலுக்கு, `இருவினை` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `நன்மை` என்னும் பண்புப் பெயர் ஈறு குறைந்து நின்றது. மேல்வினை முடிகின்ற காலத்து என, அருளுக்கு வினை தடையாய் நிற்றலைக் கூறினமையின், நன்மை, அத்தடையில்லாமை யாயிற்று. `நன்னின்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. உலகு - உயிர்தொகுதி. `வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்` என்பது வெளிப்படை. நடுவுயிர் - உள்ளுயிர். `மூவகை உயிர்கட்கும் மூவகையாக அருளுதலை நியதமாக ஆகமங்கள் கூறுதல் பெரும்பான்மை பற்றி` என்பதையும் `சிறு பான்மை` கீழுள்ளார்க்கும் மேலுள்ளார்க்கு அருளுதல்போலவே அருளுதல் பரிபாக முதிர்ச்சியான் உண்டு` என்பதையும்,``பண்டைநல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்`` *
என்னும் சிவஞான சித்தியாலும், அதற்குச் சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் இருவரும் உரைத்த உரைகளாலும் உணர்க.
``ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே``l எனச் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டதாயினும், உடலைப்புறந்தந்து காத்தல், உறுதி கூறி நிற்றல் என்னும் இரண்டும் முறையே தாயர்க்கும், தந்தையர்க்கும் எஞ்ஞான்றும் கடனாயிருத்தல் கண்கூடு. ஆயினும், `உடல் தாய் தந்தையர்க்கு அவற்றைக் கடைபோகச் செய்தல் கூடாதாயினும், உயிர்த்தாய் தந்தையாகிய இறைவன் தான் ஆட்கொண்ட உயிரைக் காத்தலை எஞ்ஞான்றும் கடனாகக் கொண்டிருக்கின்றான்` என்பார், ``பின்னின்று அருளும்`` என்றார். `பின்னும், என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
``அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதிஎனப் பெற்ற அணுவை - அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்``
எனவும்,
``உடனா யிருக்கும் உருவுடைமை என்றும்
கடனாயிருக்கின்றான் காண்``3
எனவும் அருளிச்செய்தன காண்க. `முடிவில் பிறவியை நீக்கும்` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் உயிர்கட்கு அருள் செய்யுமாறெல்லாம் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage