
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 4.துறவு
பதிகங்கள்

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.
English Meaning:
God is Reached by Renunciation:Beyond birth and death,
Reached by renunciate tapas Is He
My Lord of resplendent glory!
Sing His praise! Incessant pray!
The Heaven`s Lord shall show you
The Dharma`s Land.
Tamil Meaning:
இறப்பும், பிறப்பும் ஆகிய இரண்டினின்றும் இயல் பாகவே நீங்கி, உயிர்களும் அவற்றினின்றும் நீங்குதற்குத் துறத்த லாகிய தவநெறியின் முறைமையைச் சொல்லியருளிய சுயஞ்சோதி யாகிய சிவனை ஒரு ஞான்றும் மறத்தல் இல்லாதவராய், வாயாலும் வாழ்த்தி நிற்பவர்கட்கு அவன் இன்ப உலகமாகிய தனது உலகத்தை வாழும் இடமாகக் காட்டியருளுவான்.Special Remark:
சிவன் பிறவாமை உரையாலும் கருதலாலும் அறியப் படுதலின் அதனையே முன்னர்க் கூறினார். செவ்வெண்ணே யன்றி உம்மை யெண்ணும் தொகை பெறுமாதலின், இனிது விளங்க, ``இருமையும் நீங்கி`` எனத் தொகைகொடுத்து ஓதினார். எனவே, ``இருமை`` என்பது எண்ணின்கண் வந்தது. `இருமையினும்` என ஐந்தாவது விரிக்க. சிவன் இருமையினும் நீங்கினமையை எடுத்தோதி யதனால், `உயிர்களும் அவற்றின் நீங்குதற்கு` என்பது பெறப்பட்டது. தவம் - தவமாகிய நெறி. உயிர்கள் வினைவழியே இயங்குவது அவ நெறியும், வினை நீங்குதற்குரிய வகையில் இயங்குவது தவநெறியு மாதலின், அவற்றுள் துறவு தவநெறியாதல் உணர்த்துவார், `துறக்கும் தவம்` என்றார். எனவே, துறத்தலையே `தவம்` என்றமையால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``கண்ட`` என்றது `தானே கண்ட` என்னும் பொருட்டாய், `பிறர்க்குச் சொன்ன` எனத்தன் காரியம் தோன்ற நின்றது. சொல்லியது வேதாகமங்கள் வாயிலாக என்க. `சோதிப் பிரான்` என்றதும் அவ்விரண்டும் பற்றி. எனவே, அவனல் லது பிறர் அதனை அறிவாரும், அறிவிப்பாரும் இல்லை என்க. மறப் பின்மை பிற பொருளை நினையாமே யாதலின், அது பற்றறுத்தலைக் குறித்தல் அறிக. வாய்மொழிதல் நினைவின் வழித்தாதல் வெளிப் படை. அறப் பதிபுண்ணியலோகம்; என்றது, சிவபுண்ணிய லோகத்தை என்னை?``யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்`` 1
என்றமையால், துறந்தார் அடைவது பசு புண்ணியம் செய்வார். அடைதற்குரிய துறக்க லோகம் ஆகாமையின். ``அமரர் பிரான்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதன்கண் ``பிரான்`` என்பது, ``அமரர்`` என்பார் முகமகனாக அங்ஙனம் கூறப்பட, உண்மை அமரன் சிவனேயாதல் விளக்கிநின்றது.
``அச்சுதன் அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமகனே. 2
என்ற கந்தபுராணத்தை நோக்குக.
இதனால், பிறவி நீங்கும் நெறி துறவேயாதலும், அதுவும் சிவநெறியின் பொதுவும், சிறப்பும் ஆகிய நூல்களிற் சொல்லப்பட்ட தேயாதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage