
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பதிகங்கள்

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.
English Meaning:
Scorch the gathering KarmasAnd exhaust them;
There is One who annihilates them
And the city where He does it
He fashioned the body, He pervades everywhere.
He placed the Mind and cognate tattva group besides,
He gave us Wisdom ample to discriminate.
Tamil Meaning:
நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.Special Remark:
இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `சேரும் வினைகளைத் தீய வைத்து ஆர்மின்கள்` என மாற்றி முடிக்க. வன்மை - அழிவின்றி நிலைபெறுதல். பரமுத்தி நிலையை இவ்வாறு உருவகம் செய்தார் என்க. திருவள்ளுவர் ``புக்கில்`` என்றது காண்க. `ஒன்று உண்டு` என்ற குறிப்பால், பின் வருவன அதனை அடைதற் பொருட்டுக் கொடுக்கப்பட்டனவாதல் போந்தது. காயம், இடத்தால் வரையறை உடைய தூல சரீரம். ``எங்கும் கலந்து நினைப்பது`` என்றதனால், `அஃது அவ்வரையறையைக் கடந்த சூக்கும சரீரம் பர சரீரங்களைச் சுட்டிற்று` என்பதும், ``ஆயம்`` என்றதனால், `அவைதாம் தன்மாத்திரை அந்தக் கரணங்களும் வித்தியா தத்துவங்களும் ஆகியவற்றது தொகுதிகள்` என்பதும் போந்தன. ஆய் உணர்வு ஆர - ஆராய்ச்சி அறிவு நிரம்புதற்கு; என்றதனால் அதன்பொருட்டு வைக்கப்பட்டவை நூல்கள் என்பது இனிது விளங்கிற்று. இதனானே, அந்நூல் நுதலிய பொருளை ஒருசொல்லானும், நூற்பொருளைப் பல சொல்லானும் அறிவுறுத்தும் அருளாசிரியர்களை வைத்தமையும் பெறப்படும். ``நினைப்பது`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது. இவ்வொருமை ஆயத்தின் மேல் நிற்றல் அறிக.இதனால், `மேற்பல இடத்தும், `உய்த்த சங்காரம்` எனப்பட்ட திருவருட் சங்காரத்தையே பயனாக உடையன பிற சங்காரங்கள்` என அதன் சிறப்பு உணர்த்தப்பட்டது. இங்ஙனம் அருளலையும் சங்கார மாக வைத்துக் காட்டியது, இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்னாது மூன்று எனக் கூறும் வழியும் மறைத்தல் காத்தலுள்ளும், அருளல் அழித்தலுள்ளும் அடங்கி நிற்கும் என்பது உணர்த்துதற்கு என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage