
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.
English Meaning:
The seas He owns and the mountains high;His Body shaped of the elements five;
The Lord of Immortals who, through endless ages,
Mounts the powerful Bull, at devotees heart to arrive.
Tamil Meaning:
சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.Special Remark:
மூன்றாம் அடியை முதலில் கொண்டு, அதன்பின், பல ``ஊழிதொறூழி`` என்றதனைக் கூட்டி உரைக்க. உருவத்தை ``உடல்`` என்றார். `பூதம்` என்றே ஒழியின், கட்புலனாகாகது, அருவமாயுள்ள தத்துவ மாத்திரையே குறிக்குமாகலின், கட்புலனாம் உருவை உணர்த்த வேண்டி இது கூறினார். இடம், ``இடனில் பருவம்`` என்புழிப் போல ஏற்புடைத்தாய நிலை. `அது கல்வியானாயது` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.இதனால், சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பவனாயினும் கற்றாரது நெஞ்சத்திலே இனிது விளங்குதல் கூறுமாற்றால், `அவனைக் கண்டு பெறுதற்கு அவனது அருள்நூற் கல்வி இன்றியமையாதது` என்பது அறுதியிட்டுக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage