
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.
English Meaning:
When the Learned-wise in deep meditation sat,In their deep, illumined souls was an Inner Eye;
What in contemplation they saw and spoke,
In turn opened other`s leading to Wisdom high.
Tamil Meaning:
கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.Special Remark:
``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை,கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393
எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம்.
இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage