
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 23. கல்வி
பதிகங்கள்

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே.
English Meaning:
While yet life subsists, the Lord of existence adore;In action prove what you learn all sins to clear;
In accents unfaltering worship the Lord, and thiswise,
A jewelled lamp It`ll be, beyond compare.
Tamil Meaning:
இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.Special Remark:
கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும்,கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள்,391
என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2
என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை,
`சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி`
-தி.12 பெ. பு. மனுநீதி, 18
எனவும்,
``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு``
-தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4
எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை,
``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
(ஆகிய)
உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70
எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில்,
``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
(ஆகிய)
உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` தி.12 ஞான. 70
எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க.
சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல்.
இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன்
பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage