
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பதிகங்கள்

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
English Meaning:
Even the Siddhas, standing close in banded group,Knew not the Light Supreme in splendorous glow;
But He gave Salvation`s bliss and the Vision splendid,
To them whose hearts did in intense devotion overflow.
Tamil Meaning:
அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார்களில்லை.Special Remark:
`அறிந்தாராயின், அவர் அவன்பால் அன்பையே வேண்டுதலல்லது, அணிமாதி சித்துக்களை வேண்டார்` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. பயன் வேண்டுவாருட் சிறந்தவர் சித்தராகலின், அவரையே எடுத்து ஓதினார். ஓதவே, பிறரும் அத்தன்மையராதல், தானே பெறப்பட்டது. அடியவரது செயல்யாதாயினும் அதற்குச் சிவன்தானே முன்னிற்றலை,``சிவனும்இவன் செய்தியெல்லாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்று கொள்வன்;
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே``
-சிவஞானசித்தி - சூ. 10.1
என்பதனான் அறிக. சிவபெருமான் தன்னையே சார்ந்து நின்றாரையே தானும் சார்ந்து நிற்றலை, `அற்றவர்க்கு அற்ற சிவன்` (தி.3 ப.120 பா.2) என்று அருளியவாற்றான் அறிக.
``சித்தர்கள் என்றும் தெரிந்தறிவார் இல்லை`` என்றதனால், பத்திமையாலே தொழாதார்க்குச் சிவபெருமான் முத்தி கொடுத்தலும், முன்னிற்றலும் செய்யாது, பிறப்பைக் கொடுத்து அவர் வினைக்கு அவரையே முதல்வராகச் செய்தல் பெறப்பட்டது.
இதனால், இருதிறத்தாரையும் சிவன் அறிந்து அவரவர்க்கு ஏற்றன செய்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage