
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
பதிகங்கள்

இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.
English Meaning:
The Lord gave us this life to attain supreme bliss,But we spent it in deeds that bring misery
Yet if we have love for Him
He will put an end to our rebirths.
Tamil Meaning:
முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.Special Remark:
`பிறவிக்குச் செய்தவன்` என இயையும். `செய்த` என்பதன். ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆதிப் பிரான் முன்பு வைத்த இப்பிறவி முடிவு அதுதானே` எனக் கூட்டுக. துன்பப் பிறவித் தொழில் பலவாவன ``அறமும், மறமும்` என வகையால் இரண்டாய், விரியால் எண்ணிறந்தனவாய் உள்ள வினைகளை அறிந்து அவற்றை ஏற்ற காலத்தில் ஏற்குமாற்றால் கூட்டுதல். எனவே, `பிறப்பிற்குக் காரணங்கள் பலவாயினும், வீட்டிற்குக் காரணம் அன்பு ஒன்றே` என்றதாயிற்று.இதனால், `சிவபெருமான் அன்புடையாரிடத்தே கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குவன்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage