
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
பதிகங்கள்

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.
English Meaning:
What avails the holy garb if the holy life you refuse?Theirs the truest garb when outer guise and mind accord;
If the king justly rules and restrains these who go off the holy way
Then he and attain salvation.
Tamil Meaning:
யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.Special Remark:
பலவகைக் கடவுள் நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார். `வேடமே மெய்வேடம்` என, ஏகாரத்தை மாற்றி உரைக்க. ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின் நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும் ஆகலானும் அன்ன போலிகள் தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தாற் பயன் இன்று` என்பதை,வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். -குறள், 272
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையேயன்றித் தீமையும் பெருகுதலை,
தவம்மறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. -குறள், 273
வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று -குறள், 274
எனவும், வேடம் புனையாராயினும், உண்மையில் நிற்பார் உயர்ந் தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்து விடின். -குறள், 280
எனவும் திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
இதனால், கடவுள் நெறியில் போலிகள் தோன்றாதவாறு குறிக் கொண்டு காத்தல் அரசற்குக் கடமை என்பது பொதுவாகக் கூறப் பட்டது.
எவரேனுந் தாமாக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. -தி.6 ப.51 பா.3
என்றாற்போலும், திருமொழிகள் உலகியலைக் கடந்து அருள் நெறியில் நிற்கும் அன்புநெறி (பக்திமார்க்கம்) பற்றியனவும், இங்குக் கூறிய பலவும் உலகியலைக் கடவாத நூல்நெறி (விதிமார்க்கம்) பற்றியனவுமாம் ஆதலின் இவை தம்முள் முரணாகாமை அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage