
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பதிகங்கள்

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே.
English Meaning:
The flame emerging from the sacrificial fire fed with ghee,When it enters our heart the egoism is burnt away,
The moment this truth is realized, salvation dawns,
The is the path supreme.
Tamil Meaning:
நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.Special Remark:
மை - இருள்; புற இருளைப் போக்குகின்ற தீயினை ஓம்புமாற்றானே, அக இருளையும் போக்கிக்கொள்ளுதல் கூடும் என்பது பற்றி ``நெய்நின்றெரியும் ... வகை அறிவார்கட்கு`` என்றார். அவ் வகையாவது, சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து பயன் கருதாது அன்பு மாத்திரத்தால் வேட்டல், அங்ஙனம் வேட்டோர் சிறப்புலி நாயனார், சோமாசிமாற நாயனார் முதலியோராதல் அறிக. ``அவிழ்தரும்`` என்னும் பெயரெச்சம் `மந்திரம்` என்னும் கருவிப் பெயர் கொண்டது. செய்தல் - தேடுதல். ``செய் நின்ற`` என்பது `செய்ய நின்ற` என்னும் பொருட்டு.இதனால், `அந்தணர் வேள்வி அவர்க்கு முத்தி சாதனமும்` ஆம் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage