
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
பதிகங்கள்

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
English Meaning:
The Vedic Brahmins who holy sacrifices perform,On Salvation intent, give before they eat;
Even as in knowledge true, supreme they stand,
So in conduct they lead–to the One Goal headed straight.
Tamil Meaning:
முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.Special Remark:
`முத்தீ வேள்வி செய்கின்ற` என்றதனால், தேவ யாகம் பிதிர் யாகங்களும், `வேதத்தை ஓதுகின்ற` என்றதனால் பிரம யாகமும், `பிறர்க்கும் பிற உயிருக்கும் கொடுத்து உண்பர்` என்றதனால், மானுட யாகம், பூத யாகங்களும் ஆகிய ஐவகை வேள்விகளும் குறிக்கப்பட்டன. எனவே, `சிறப்புப்பற்றி, அக்கினி காரியமே, `வேள்வி` எனப்படுமாயினும், இவையும் வேள்வியேயாக, வேள்வி ஐவகைத்து` என்பதும், `ஐவகை வேள்வியையும் எஞ்சாமற் செய்பவரே சிறப்புடை அந்தணர்` என்பதும் கூறியவாறாயிற்று,இனைத்துணைத் தென்பதொன் றில்லை, விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -குறள் 87
எனவும்,
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். -குறள் 88
எனவும் விருந்தோம்பலைத் திருவள்ளுவரும் `வேள்வி` எனக் குறித்தார். `போங்கதி` என்பது தொகுத்தலாயிற்று. `போகதி` வினைத் தொகை என்றலுமாம். ``புறம்`` என்றது ``அயல்`` என்னும் பொருட் டாய், பிற மக்களையும், உயிரையுங் குறித்து நின்றது. `அறங் கறக்கும்` என்றல்போல, ``புறங் கொடுக்கும்`` என்றது நான்காவதன் தொகை.
`அந்தணர்க்கு வீட்டு நெறி அவரவர் அறிவிற்கேற்ப அமையும்` எனவே, `கன்மமே வீடு பயக்கும்` என்று உணர்வார்க்கு, அக்கன்மத்தின் பயனாகிய துறக்கமே வீடாகும். `பிரமம் ஒன்றே மெய்; பிறவெல்லாம் பொய் என்று உணர்வதாய பிரம ஞானமே வீடு பயக்கும்` என உணர்வார்க்கு, அவர் பிறவெனக் கழிப்பன பிரகிருதி யளவேயாதலால், பிரகிருதிக்கு மேலேயுள்ள புருட தத்துவமே அவர்க்கு வீடாகும். தத்துவங்களும், அவற்றிற்கு வேறாய் உள்ள சீவான்மாவும், பரமான்மாவைப் போல வேறு முதல்களே; ஆயினும், தத்துவங்கள் சடமாயும், சீவான்மா தூல சித்தாயும் நிற்றலின், சூக்கும சித்தாகிய பரமான்மாவிற்கு அவை முறையே உடைமையும், அடிமையுமாய்ச் சுதந்திரமின்றி நிற்பனவாம் என்பதை உணர்ந்து யான், எனது என்னும் செருக்கு நீங்கிப் பரமான்மாவினது நிறைவில் அடங்கிநிற்றலே உண்மைப் பேறு என உணரும் பதி ஞானமே வீடு பயக்கும் என உணர்பவர்க்குப் பரமான்மாவே வீடாகும் என்பது பெறப்பட்டது.
இங்ஙனம் கூறிவந்த பலவற்றுள் ஒன்றையும் வேதம் ஒரு தலைப்பட உணர்த்தாது, எவ்வாறும் உணர நிற்றலின், வேதம் ஒன்றையே ஓதி வீடுபெற எண்ணுவார் மெய்ந்நெறியைப் பலபட உணர்ந்து தம்முள் இகலி நிற்பர் ஆகலின், ``தாமறிவாலே தலைப் பட்டவாறே`` என்றார்.
வேதத்துட் கூறப்பட்ட பல திறப்பொருளையும் இஃது இன்ன அளவினது எனவும் `எல்லாவற்றினும் மேலாக முடிந்து நிற்கும் பொருள் இது` எனவும் வரையறுத்து ஒருதலைப்பட உணர்த்துவன சிவாகமங்களே யாதலின், அவற்றை உணரும் சைவர் பிறரோடு இகலுதலின்றி மெய்ந்நெறியை உண்மையாகத் தலைப்படுவர் என்க.
வேதத்தை உடம்பட்டோர் அனைவர்க்கும் `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றுள், `வீடே சிறந்த பேறு` என்பது ஒப்ப முடிந்ததாக லின், `அதனை இத்தன்மைத்து என உணரும் உணர்விற்கு ஏற்பவே, அவரது வேள்வி முறைகளும் அமையும்` என்றற்கு இது கூறினார். கூறவே, `ஐவகை வேள்விகளும் அவற்றைச் செய்வாரது கருத்திற்கேற்ப `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றைத் தரும் என்பது பெறப்பட்டது.
`அக்கினி காரியமேயன்றிப் பிறவும் வேள்விகளே` எனக் கூறியவாற்றால், `சைவாகமங்கள், `சிவபெருமானை அகத்தாலும், புறத்தாலும், அறிவாலும் வழிபடும் வேள்வியே சிறப்புடை வேள்வி` எனவும், அக்கினி காரிய வேள்வியுள்ளும் சிவபெருமானைப் பொது நீக்கித் தனிப்பெரு முதல்வனாக வைத்துச் செய்யும் வேள்வியே செய்யத்தக்கது` எனவும் கூறும்.
இன்னும், ``தாமறி வாலே தலைப்பட்ட வாறே`` என்றதனால், வேதத்தின் பொதுமை காரணமாக முத்தீ வேள்வியும் அவ்வாறு அமையும் என்பது கொள்க. அஃதாவது, பரிமேதம், பசுமேதம் முதலாகச் சொல்வனவற்றை உயிர்ப்பலி வேள்வியாகச் செய்தல் வேண்டும் எனக் கொண்டு ஊனை அவிசாக இட்டுச்செய்தலும், அவற்றிற்கெல்லாம் வேறு பொருள்கொண்டு பசுவிடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், நெற்பொரி, அரிசிமா, தேங்காய், வாழைப்பழம் முதலியவற்றையும் அவிசாகச் சொரிந்து செய்தலும் போல்வன. வேதத்துள் `அஜத்தைக் கொண்டு வேட்க` என்பதற்குப் பிறரெல்லாரும் `அஜம்` என்பதற்கு `யாடு` என்பது பொருள் என்று கூறினர் எனவும், அகத்திய முனிவர், `மூன்றியாண்டு கழிந்த நெல்` எனப் பொருள் கூறினர் எனவும் பாரதத்துட் கூறப்பட்டன. இங்ஙனம் வேறுபடுவாரது நிலையைத் திருஞானசம்பந்தர்,
``ஊனொ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்``
-தி.3 ப.53 பா.9
எனக் குறித்தருளினார்.
அறவினை யாதெனிற் கொல்லாமை; கோறல்
பிறவினை யெல்லாம் தரும். -குறள் 321-
என்றவாறு, கொலைப் பாவம் ஏனை எல்லாவற்றினும் பெரிதாகலின், அதனோடு தொடர்புடைய யாதொன்றும் அறமாவதில்லை எனினும், செய்வாரது கருத்துவகையால் அதுவும் அறம் என வைக்கப்பட்ட தாயினும், அன்னதொரு வேள்வி கடைப்பட்ட வேள்வி எனக் கழித்து, உயிர்க்கொலை இல்லாத தூயவேள்வியே, வேள்வி என உயர்ந்தோர் கொள்வர் என்பது பற்றியே,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
எனப் பொதுப்படக் கூறுமிடத்து ஊனாகிய அவியையே பெரும் பான்மையும் குறிப்பாற் கீழ்ப்படுத்துக் கூறி,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. -குறள் 328
எனச் சிறப்பாகக் கூறுமிடத்து ஊன் வேள்வியை வெளிப்படை யாகவே மறுத்துக் கூறினார் திருவள்ளுவர். சைவ வேள்விகள் பலவும் சைவாகமத்துள்ளும், வழக்கத்துள்ளும் பசு விடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், தாவரங்களினின்று பெறப்படும் நெல் முதலியவற்றான் ஆய பொருள்களையுமே அவிசாக இட்டுச் செய்யப் படும் தூய வேள்விகளாகவே காணப்படுதல் அறிக.
இதனால்,
``பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை`` -தி.1 ப.80 பா.2
என்றதனுள், ``பசு`` என்றது; `பசுவிடத்து உண்டாகும் நெய் பால்கள்` எனப் பொருள்படுதலன்றிப் பிறிது பொருள்படாமை அறிந்து கொள்க. `பிறிது பொருள்படும்` என்பார் உளராயின், அவர் சிவாகமங் களையே யன்றித் தில்லைக்கணுள்ள வழக்கத்தினையும் அறியாதவரே யாவர்.
``அவன்உகந் திட்டஇறைச்சி எனக்குநன்
மாதவர் இட்ட நெய்பால் அவியே`` -தி.11 நக். திருமறம்
எனப் பதினொன்றாம் திருமுறையிலும், `மாதவர், நெய்பால் அவியே இட்டுச் சைவ வேள்வியே வேட்பர்` என்பது சொல்லப்பட்டது. இவ்வாற்றானே, சிவபாத இருதயர் செய்யக் கருதியதாகச் சேக்கிழார்,
``ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே புரியும்நல் வேள்வி``
-தி.12 திருஞான. பு. 429
எனக் குறித்த நல்வேள்வியும், ஞானசம்பந்தர்தாமே,
``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`
-தி.12 திருஞான. பு. 821
எனக்குறித்த வேள்வி. `உலகம் இன்புறச் சங்கரர்க்கு முன்வந்த அற்சனை வழிபாடுகளுள் ஒன்று`` என அவர் (சேக்கிழார்) விளக்கிய சந்த வேள்வியும் எல்லாம் சிவநெறி வேள்வியாகிய தூய வேள்வி களே என்பது விளங்கும். இவற்றானே, தம் உணவினும் சைவராய் உள்ளவரே ஊன் வேள்வியை மறுத்தற்குரியரன்றி, உணவில் சைவராய் இல்லாதோர் ஊன் வேள்வியை மறுத்தற்கு உரியரல்லர் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
புத்தர் புலால் உண்டலை விலக்காது, கொல்லுதலை மட்டுமே விலக்குவர்; சமணர் இரண்டனையும் விலக்குவர். அவ்வாற்றால் அவ் விருவரும் ஊன்வேள்வியை இகழ்தல் அவர்தம் மதத்திற்கு ஏற்புடைய தாயினும், வேள்வி செய்வார்க்கு வரும் பயனை உணராமையானும், ஊன் இடப்படாத தூய வேள்வியை அவர் கைக் கொள்ளாமையானும் அவர் செயல் சிவநெறியாளரால் இகழப் படுவதாயிற்று என்க. இத்திருமந்திரத்துள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், வேள்விகளின் வகைகள் பலவும் வகுத்துக் கூறி, `அவற்றுட் சிறந்தது சைவ வேள்வியே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage