
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.
English Meaning:
Extract the food of NectarThe cooking pot body contains the rice of nectar,
The three fires are the sun, moon and agni and the five firewoods are the pranas,
Without wasting time get the rice of nectar cooked,
The days are passing away fast.
Tamil Meaning:
ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றிவைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.Special Remark:
`உயிர் உணர்வு சிவனைச் சார்ந்தால் நிலை பெற்று இன்பந் தருமேயல்லது, மாயாகாரியங்களைச் சார்ந்தால் நிலை பெறாது துன்பத்தையே தரும்` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். துடுப்பு, உயிர்; அரிசி, அதன் உணர்வு; ஐந்து பானை, ஐந்து உடம்பு; மூன்று அடுப்பு, `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என்னும் மூன்று காலங்கள்; ஐந்து விறகு, ஐம்பொறிகள். இவை இங்ஙனம் உருவகிக்கப் பட்டமைக்குரிய இயைபுகளை ஓர்ந்துணர்ந்துகொள்க. இங்குச் சொல்லப்பட்ட பானை முதலியவற்றால் அடுதல் தொழில் நிகழ லாகாமை அறிக. ``எரியாமல்`` என்பது, பிறவினை வினையெச்சம். `விடுத்தனவாகிய நாள்களும்` என்க. `துடுப்பிடு பானைக்கும்` என்பது பாடம் அன்று. நல்ல அட்டில் தொழிலாளன், சிவன். ஐந்துடம் பாவன, `சோற்றுடம்பு, காற்றுடம்பு, உளத்துடம்பு, உணர்வுடம்பு, களிப் புடம்பு` என்பன. இவை முறையே, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` எனப்படும். இவற்றின் இயல்பு அப்பால் விளங்கும்.இதனால், மாயா காரியங்களின் வேறுபாட்டால் உணர்வு நிலையாமை உடைத்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage