
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.
English Meaning:
Our Days are NumberedThe sun`s rays visit all the quarters ten,
But men measuring with their little sense know this not;
They ponder not nor on the deep mystery muse,
These men on earth – subject to birth and death.
Tamil Meaning:
பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.Special Remark:
ஒளி காரணமாகப் பகலவனை இறைவனோடு உவ மித்தல் வழக்காதல் நோக்கி இறைவன் அவனினும் மிக்கவனாதலை விளக்கினார். இங்ஙனம் அவனது முற்றுணர்வின் பெருமையை எடுத்துக்கூறியது, அவ்வறிவாற்றலால் அவன் அனைத்துயிர்களையும் தன் இச்சைவழி நடாத்துகின்றான் எனக் கூறுதலை நிறுவுதற் பொருட்டாம். ``அன்று`` என்பதன்பின் `முதல்` என வருவிக்க. அளக் கின்றதற்கு வினைமுதலாகிய ``நந்தி`` என்பது மேலைத் திருமந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. ``அறிகின்றிலர், உணரார்`` என இரு தொடராக வைத்து அருளியது, `அவ்விரண்டும் தனித்தனி ஆய்ந் துணரத் தக்க சிறப்புடையன` எனறற்கு. ``இந்நிலத்தின்`` எனச் சுட்டிக் கூறினமையால், ஏனையிடத்தில் அனைத்துலகமும் கொள்ளப் பட்டன. மூன்றாம் அடியை இறுதியின் வைத்து உரைக்க. பொன்றுதல், இங்கு, நிலையாமை. ``உணர்வார்`` என்பது, `உணர்வு` என்பதன் அடியாகப்பிறந்த பெயர். அனைத்துயிர்களையும் உயர்திணையாக வைத்துக் கூறினார் என்க. மாயம் - அழிவு. சிவன் பெத்தத்தில் கருவிகள் வாயிலாக நிலையாத உணர்வையே உயிர்கட்கு உண்டாக் குகின்றான் என்பதை உணர்வார்க்கு உணர்வினது நிலையாமையும் விளங்கும் என்பது கருத்து.இதனால், உணர்வு நிலையாமைக்குக் காரணங் கூறுமுகத்தால், அந்நிலையாமை வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage