
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
பதிகங்கள்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.
English Meaning:
Body is an Empty VesselThe Lord of this body frail that to ashes turns, the Lord of Vedanta dance
Nandi He is, who in this crumbling frame disports
They, who know not what an empty vessel this body is,
They know not what the life sustains and supports.
Tamil Meaning:
இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.Special Remark:
வேம் கட நாதன் - வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள். இனி, `வேங்கடமலைமேல் உள்ள நாதன்` என வேறொரு பொருளும் தோன்றக் கூறினமை காண்க. ``வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் - வேங்கடத்து நோயால் வியந்து`` (தி.11. கபிலர் அந்தாதி 15) என வருதலின், வேங்கடம் சிவதலமாதல் பெறப்படும். வேம் கடத்துள்ளே - வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்ளே. இறைவன் நமது புலாலுடம்பினுள்ளும் உளனாதல் மேலே (தி.10 பா.115 - 116) காட்டப்பட்டது. வேம் கடம் என்று - வெந்தொழியும் உடம்பு என்று அறிந்து. விரகு - உபாயம்; உபாயத்தால், என உருபு விரிக்க. `தாங்க வல்லதாகிய ஆருயிர்` என்க. `உயிரை அதற்கு உயிராய் நின்று யாண்டும் காத்தலின்` இறைவனை, ``தாங்க வல்ல ஆருயிர்`` என்றார். ``தன் கடன் அடியேனையும் தாங்குதல்`` (தி. 5. ப.19. பா.9) எனவும், ``எடுத்துச் சுமப்பான்`` (திருவருட்பயன் 55) என்றும் வருவனவும், இறைவன் உயிரைத் தாங்குவோனாதலை விளக்க எழுந்தனவாம். தாங்கவல்ல ஆருயிரை அறியாமையாவது, `அவ்வுயிரே, தாங்கப்படுகின்ற உயிர்க்கு உணர்வைத் தருவது` என அறியாமை. `அறிந்தால், தமது உணர்வு நிலையாமை உடையது என்பது விளங்கும்` என்பது கருத்து. `சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது` என்பதனை,அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும்
நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லாகமம் ஓதும் நாடு.
-உண்மை விளக்கம் 30
என்பதனான் அறிக.
``நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்`` -தி.6 ப.62 பா.2
என அருளிச்செய்ததும் இதனை.
இதனால், உணர்வு உளதாகுமாறு கூறு முகத்தான், அதனது நிலையாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage