
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
பதிகங்கள்

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.
English Meaning:
TRANSITORINESS OF YOUTHRising Sun Sets; Glowing Youth Fades
They see the sun rises in the east and sets in the west.
Yet blind of eye, the truth they ne`er apprehend.
The tender grows, fattens for a while and dies;
But this wonder-pageant of the world they do not comprehend.
Tamil Meaning:
நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.Special Remark:
இஃது எடுத்துக்காட்டுவமை. பிறந்த கன்று வளர்ந்து காளையாய்ப் பின் கிழமாதற்கு ஞாயிற்றின் தோற்றம் செலவு சாய்வு என்னும் இவை ஒருவாற்றான் உவமையாதல் அறிக. தமது இளமை நீங்குதல் அப்பொழுது காட்சிக்கு எய்தாதாயினும், காட்சிக்கு எய்துவதாயகன்றின் இளமை நீக்கமாகிய உவமை யளவையின் வைத்தாயினும் உணர்தலே அறிவுடைமையாம் எனவும், அவ்வாறு உணர்வார் உளராயினும், உணர்ந்த தற்கேற்ப ஒழுகாமையின், அவரும் உணராதவரே எனவும் கூறுவார் இவ்வாறு கூறினார். இனி, இங்ஙனம் எடுத்துக்காட்டுவமையாக்காது, ஞாயிற்றையும், கன்றோடு உடன்வைத்து இரண்டு உவமை அளவை கூறிற்றாக உரைப்பாரும் உளர். ``எருதாய்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கன்று`` என்று போயினார். வருவித்துரைத்தன பலவும் இசையெச்சங்கள். இதனால், இளமை நிலையாமை காட்சியானே உணரப்படுதலின், அதனையறிந்து தக்கது செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage