ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
    நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
    நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
    படமாடக் கோயிற் பகவற்க தாமே.
  • 2. தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
    உண்டது மூன்று புவனமும் உண்டது
    கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
    எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.
  • 3. மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
    ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
    மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
    தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.
  • 4. அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
    சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
    பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
    நிகரிலை யென்பது நிச்சயந் தானே.
  • 5. ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
    கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
    நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
    பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.
  • 6. ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
    நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
    ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
    வேறணி வார்க்கு வினையில்லை தானே.
    அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
    ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
    சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
    முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
  • 7. அழிதக வில்லா அரன்அடி யாரைத்
    தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
    பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
    தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.
  • 8. பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
    புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
    முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
    அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.
    வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
    அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
    சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
    முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
  • 9. தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
    ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
    ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
    போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.