
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
பதிகங்கள்

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.
English Meaning:
Offering to Tapasvins is Oblation to Gods and AncestorsThe things you gave His dear devotee,
Who in Him is seated,
Are verily oblations meet for the Gods Three;
And for ancestors too,
Through generations three times seven;
This for certain shall you know
Tamil Meaning:
இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.Special Remark:
`சீவன்` என்னும் பெயரின் முதலெழுத்து இரு மாத்திரையுடையதும், `சிவன்` என்னும் பெயரின் முதலெழுத்து ஒரு மாத்திரையுடையதும் ஆதல் பற்றி, `சீவன்` என்னும் நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைத்து நின்று அவனேயான அடியவனை. `மாத்திரை யொன்றின் மன்னியமர்ந்துறை - ஆத்தன்` என்றார். சிவனடியார்கள் மாகேசுரன் எனப்படும் காரணத்தை விளக்கியவாறு. `மகேசுரனுக்குள் அடங்கிநிற்பவன் மாகேசுரன்` என்றபடி. ஆத்தன் - நம்புதற்குரியவன். `தன்னை நம்பினவர்க்கு உறுதியையே சொல்லுதலும், செய்தலும் உடையவன்` என்பதாம். எனவே, `மாகேசுரர் அத்தகையினர்` என்பது பெறப்பட்டது. சிறப் புணர்த்த வேண்டிச் சாதியொருமையாற் கூறினார். `இப்பெயர் ஆசாரி யனையே குறிக்கும், என்பாரும் உளர். அங்ஙனமாயின் இம்மந்திரம் `குருபூசை` என்னும் அதிகாரத்தில் உளதாக வேண்டும் என்க.மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். குரவர் - முன்னோர். ஏழ்குரவர், தந்தை முதலாக முறையானே முன் முன் நோக்க வரும் எழுவர். மூவெழுவராவார், தந்தைவழி தாய் வழி மனைவி வழி என்னும் மூவழியிலும் உள்ள முன்னோர் ஓரோர் எழுவர். ``தீர்த்தம்`` என்றது, `நீர்` என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஆகுபெயராய் நீர்வழியாகக் கொடுக்கும் பொருளை உணர்த்திற்று. முன்னோர்க்குப் பாவனையாற் கொடுப்பன யாவும் நீர் இறைக்குமாற்றால் கொடுக்கப் படுதலை நினைக. இதனைத் திருவள்ளுவர், `தென்புலத்தார் கடன்` (திருக்குறள், 53) என்றார்.
மாகேசுர பூசை பெரும்பான்மையும் இல்லறத்தாராலே செய்யப்படும் ஆதலின், `அவர்க்கே சிறப்பாக உரிய விருந் தோம்பலில் மாகேசுர பூசையே சிறப்புடையது` எனக் கூறுபவர், `தென்புலத்தார் கடனும் அதுவே` என்பதை இதனாற் கூறினார். இனி, `அவர்க்குத் தெய்வ வழிபாடாவதும் இதுவே என்பதை, ``மூர்த்திகள் மூவர்க்கும்`` எனத் தேவருள் தலையாயினாரைக் கூறினார்.
`விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பவற்றை அந்தணரை வழிபடுதலானே செய்தல் வேண்டும்` என்பது வைதிக நெறியே; அவைகளை மாகேசுரர் வழியாகச் செய்தலே சைவநெறி` என்பது இவ்வதிகாரத்துள் உணர்த்தப்படுதல் அறிக. இதனானே, `அந்தணர் பூசுரராயினும், மாகேசுரர் பூசிவர்` என்றதூஉமாயிற்று. இவர்களை, ``பராவுசிவர்`` (சிவஞான சித்தியார், சூ. 8. 35) என்றார் அருணந்தி தேவர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage