
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
பதிகங்கள்

அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே.
English Meaning:
Feeding the Tapasvin is superior to feeding Brahmins and GodsThough you a thousand abodes to holy Brahmins give
Though you a thousand temples for the gods build;
None, none is of merit compare
To a day`s feed to a holy devotee given;
This be of certain.
Tamil Meaning:
அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாட மாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.Special Remark:
``அகரம்`` என்பது `அக்கிரகாரம்` என்பதன் மரூஉ. `முதற் சுற்று` என்பது அதன் பொருள். `கோயிலைச் சூழ்ந்த முதற் சுற்று வீதிகளே அந்தணர் இருத்தற்குரிய இடம்` என்பது வைதிக முறைமையாதலின் அம்முறைமைபற்றி அவர்கள் வீதி எங்கிருப்பினும் அஃது `அக்கிரகாரம்` எனப்பட்டது. `அந்தணர்களை மாட மாளிகை களில்தான் வாழவைத்தல் வேண்டும், என்பதும் வைதிக நெறி யாகலின், அவர்கள் வாழும் முதற்சுற்று வீதி, `மாடவீதி` எனப்பட்டது.`திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்களை எழுப்ப அவைகளில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள்` எனவும், `அவ்வீதிகளில் பரத்தையர் தவிர மற்றையோர் யாவரும் கலந்தே வாழ்தல் வேண்டும்` எனவும், `அந்த வீதிகளைச் சுற்றிக் கடைத் தெருக்கள் இருத்தல் வேண்டும்` எனவும், `ஆக எல்லா வீதிகட்கும் புறத்திலே பரத்தையர் வீதி அமைதல் வேண்டும்` எனவும் சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணத்தில் `நகர வருணனை` வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்.
பகரும் ஞானி - இவ்விடத்தில் சொல்லப்படும் ஞானி; மாகேசுரன். ``பகல்`` என்றது `ஒரு பகல்` என்றபடி. இம்மந்திரத்தில் பாடம் திரிபு பட்டுள்ளது.
இதனால், அந்தணர்க்குச் செய்யும் தானங்களினும் மாகேசுரருக்குச் செய்யப்படும் தானம் பன்மடங்கு உயர்ந்ததாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage