
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
பதிகங்கள்

பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.
English Meaning:
Birth and Release are God`s GivingThe Jivas in born condition
Have tasks none to perform,
As of itself their birth comes;
The Jivas in Mukti State too
(By the very condition of that state)
Have nothing to perform;
Lord by His Grace grants states both;
What then is there for devotees to do
(But to hold Lord in their thoughts?)
Tamil Meaning:
உயிர்களின் நிலை `பெத்தம், முத்தி` என இரண்டு. பெத்தம், பாசங்களிற் கட்டுண்ட நிலை. முத்தி, அவற்றினின்றும் விடு பட்ட நிலை. இவ்விரண்டு நிலைகளிலும், `உயிர்களின் செயல்` என்று ஒன்று இல்லை ஏனெனில், பெத்தத்தில் உயிர்கள் பல பிறவிகளில் சென்று உழல்கின்றன. அப்பிறப்புக்களைத் தருபவனும், வாழுங் காலத்து இன்பத் துன்ப நுகர்ச்சிகளை அவற்றிற்குரிய பொருள்களைத் தந்து ஊட்டுவிப்பவனும், பின்பு அந்தப் பிறவியை நீக்கிவிடுபவனும் எல்லாம் சிவனே. அதனால், பெத்தத்திலும் அவற்றிற்கென்று ஒரு செயல் இல்லை. இனி, முத்தியாவது சிவன் குருவாய் வந்து ஞான தீக்கை செய்து வினைக்கட்டினை அறுத்து அதினின்று விடுவிப்பது. அந்நிலையிலும் உயிர் அவன் காட்டிய வழியில் நடத்தற்குரியதே யன்றித் தானாக எவ்வழியிலும் செல்லாது. மேலும் ஞான தீக்கையில் உயிர் தனது, உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவன் கையில் முழுமையாக ஒப்புவித்துவிடுகின்றது. இவ்வாற்றால், பெத்தம், முத்தி யிரண்டிலும் உண்மையில் உயிருக்கென்று ஒரு செயல் இல்லை. ஆயினும் மயக்கத்தால் உயிர்கள் பெத்தத்தில் நிகழும் செயல்களைத் தம் செயல்களாகவும், முத்தர்கள் செயலையும் அவரது செயல்க ளாகவும் கருதி மயங்குகின்றன. ஞானம் கைவரப்பெற்று பத்தி மிகுந் தவர்க்கு அத்தகைய மயக்கம் இன்றி, உண்மையே விளங்கி நிற்றலால், தமக்கும் பணியாதும் இல்லையாகும் நிலை அவர்கட்கே உள்ளது.Special Remark:
``தன்`` என்றது சாதியொருமை. ``பிறத்தலால்`` என்றது, `தம் வயம் இன்றிப் பிறத்தலால் என்றபடி. பிறத்தல் கூறவே, வாழ்தலும், இறத்தலும் பெறப்பட்டன `முத்தி` என்பது எதுகை நோக்கி, `முத்தம்` என இகரம் தொகுத்து அம் விரிக்கப்பட்டது. முறைமை - குரு கற்பித்த முறைமை. இரண்டு, பெத்த நிலை, முத்தி நிலை, அருளால் அருளின்படி. அளித்தது, அருளைத் தந்தவனுக்கு. ``தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னை`` (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 10.) என அருளினமை காண்க.இனி ஒருபோது அளித்தமையை எப்போதும் மறவாமைப் பொருட்டு அவர் எல்லாச் செயல்களையும் `சிவனுக்கு ஆகுக, சிவனுக்காக` என அருள் வழி நின்று சொல்லி முடிப்பர். `இவ்வாற்றால் பணிச் சுமை யாதும் இல்லாதார்க்குப், பத்தி மேலும் மேலும் பெருகி முதிரும்` என்பது கருத்து.
இதனால், பத்தி யுடையார்க்கு அப்பத்தி மேலும் மேலும் பெருகி முதிருமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage