
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
பதிகங்கள்

தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
English Meaning:
Grace AboundingMy inconstant thoughts
He constant made,
Clear vision gave;
He created hell and heaven
And endless births too
In Grace Abounding;
Those who these perceive not
Are in Karma`s wheel forever caught.
Tamil Meaning:
அநாதியே பற்றிய மலத்தால் அறியாமையை யுடையதாய் நிற்கின்ற உயிர்களின் அறிவு அவ்வறியாமை நீங்கித் தெளிவடைதற் பொருட்டுத் தெளிவிற்கு வித்தாக, தம்முள் மாறுபட்ட நரகலோக சுவர்க்க லோகங்களிலும் பூலோகத்திலும் வினைக்கீடாகச் சென்று பிறக்கும் பிறப்புக்களையும் சிவன் உயிர்கட்கு அமைத்திருக் -கின்றான். அங்ஙனம் அமைத்தது அருள் காரணமாகவேயாம். அதனை வன்கண்மையாக நினைக்கும் தங்கள் நினைப்பை விட்டு, அருளாகத் தெளியமாட்டாதார் தெளிதற்கு வாயிலான மானுடப் பிறப்பைப் பெற்றதும் வினையின் விளைவேயாம்.Special Remark:
``சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்``9 கூறும் முறையில் இங்கு உயிரிகளின் அறிவு ``சிந்தை`` எனப்பட்டது. ``தெளிவித்து`` என்றது வினைத்தொகை. `வித்தாகி` என ஆக்கம் வருவிக்க. ``பிறப்பும்`` என்னும் உம்மை, `வீடேயன்றி` என எதிரது தழுவிய எச்சம். ``உயிர் பெற்றது`` என்றது, `பிறப்பை எடுத்தது` என்றபடி. `உயிர் பெற்றது வினை` என மாறிக் கூட்டுக, வினையின் விளைவை ``வினை`` என்றார். என்றது, `முன்னைப் பிறவிகளின்றும் இப்பிறப்பிற்கு வேறு சிறப்பில்லை` என்றபடி. அஃதாவது, `இப்பிறப்பிலும் முன்புபோல வினையை ஈட்டிக் கொள்ளுதலை மட்டுமே செய்வவர்; உய்யும் நெறியைத் தலைப்படார்` என்பதாம்.இதனால், `மானுடப் பிறப்பை எய்தினோர் சிவன் நவாவத்தை அபிமானியாதலை உணர்ந்து படிமுறையானே அவனை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage