
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பதிகங்கள்

பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.
English Meaning:
Lord Gave Jnana and MantraBeyond, beyond the Light
That defies description,
Is the place where
My loving Lord abides;
He showed me the Light (Jnana)
That is beyond thought;
He taught me the Mantra
That is beyond words;
His Holy Feet, adoring I stood.
Tamil Meaning:
சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடையதலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப்படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.Special Remark:
``பன்னாத`` என்பதை ஒளிக்கும் கொள்க. `ஒரு நிலம்` என்றும், `ஓர் ஒளி` என்றும் சொல்லப்பட்டது. `பரவெளி` என்றும், `சிதாகாசம்` என்றும் சொல்லப்படுகின்ற பராசத்தி அது தன் குணமாக, அக்குணத்தையுடைய குணியாதல் பற்றிப் பரமசிவனை, அதற்கும் அப்புறத்துள்ளவனாகக் கூறினார். ``அப்பால்`` என்றது, `அந்த இடம்` என்றபடி. `அப்புறத்துள்ள அந்தப் பால்` என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளத்துள் ஒரு பொருளை நினைப்பது என்றாலும் யாதானும் ஒருவடிவில்தானே நினைத்தல் வேண்டும். அஃது இயலாமையால், ``உன்னா ஒளி`` என்றார். உரை செயா மந்திரமாவது உரைசெய்யப்படும் மந்திரங்களையெல்லாம் வாயிலாகக் கொண்டு இயக்கி, அம்மந்திரங்கைளக் கணிப்பவர்க்கு அவற்றின் பயனைத் தந்து நிற்கும் அந்தப் பொருள். இங்ஙனம் இருவகையாகக் கூறிய இதுவும் திருவருளைக் குறித்ததேயாம். ``உரைசெயா மந்திரம்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. ஒருவன் - குருமூர்த்தி. அவ்வெழுவாய் வருவிக்கப்பட்டது. குருமூர்த்தி அருளைச் சொன்னதாவது, `உண் அறிவிற்கு அருளையே தாரகமாகக் கொண்டு, அறிந்தும், செய்தும்நில்` எனக் கூறியது. `அவ்வழியில் நிற்கவே, தலைவனது திருவடிப்பேறு கிட்டிற்று` என்பதாம்.இதனால், `அடி, தலை` என்பவற்றுள் இறைவனது, திருவடிபின் சிறப்பும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage