
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பதிகங்கள்

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
English Meaning:
Feet are Grace; Head is JnanaNeither head nor foot they know
Miscreants they are;
The Feet the Holy say
Are the Grace of Sakti;
The Head the Holy say
Is Jnana
That with First Cause unites;
When to Jiva the Feet of Grace
Shows the Head of Jnana
Then shall Liberation be.
Tamil Meaning:
முற்செய் தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறி வின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனில வற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப் படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லாவற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை``*
என்றதும் இக்குறிப்பினதே.) காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.
Special Remark:
`கால்` என்பது, `தாள்` எனவும்படும் தாள் - முயற்சி -யுமாம். முயற்சியே கிரியை. ``எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி``* என்றபடி, இச்சையும் கிரியையும் ஞானத்தின் வேறு பாடேயாம். இச்சை எப்பொழுதும் ஒரு நிலையிலேயிருக்கும். ஏனை ஞானமும், கிரியையுமே செயற்படும் அதனால், இயங்கு கருவி யாகிய கால், (இறைவனது இருதிருவடிகளும் இறைவனது) ஞானமும், கிரியையுமேயாம். உயிர்கட்கு அறிவு தலையில் இருத்தலால், அவற்றின் இச்சை செயல்களும் தலையில் உள்ளனவாம். எனவே, `காலின்கீழ் உள்ளது தலை` என்பது பொருள். இறைவனது ஞானேச்சாக் கிரியைகள் வியாபகமாய் நிற்க. அவற்றில் உயிர்களின் ஞானேச்சாக் கிரியைகள் வியாப்பியமாய் நிற்றலைக் குறிப்பதாம். சிவமும், சீவனும் ஒன்றும் ஆகாமல் இரண்டும் ஆகாமல் நிற்பதே சித்தாந்தபரமுத்தியாகலின், அதனை விளக்குதற்கு எத்தனையோ தொகைச் சொற்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விடுத்து, ``தாடலைபோல்`` எனக் கூறுவதும் இது பற்றி.``தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகம்எனக் கொள்``*
என்பது காண்க. `காறலைபோல்` எனக் கூறலும் உண்டு. ``என்பர்`` என்பதை, ``காரணம்`` என்பதன் பின்னர் கூட்டுக. `கால்` என்பதைக் குறையெண்ணுப் பெயராகக் கூறுவோர், `தலை` என்பதை அங்ஙனங் கூறமாட்டாமை அறிக.
இதனால், `அடிதலை தெரிதல்` என்னும் வழக்கின் உண்மைப் பொருள் விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage