
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பதிகங்கள்

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.
English Meaning:
Lord is GraciousAimless I wandered,
On me He planted His golden Feet,
In purity He entered, and made me pure
In charity He entered, and gave me the bliss of ambrosia
What ho! this gracious act!
In wonder limitless, I stand bedazed.
Tamil Meaning:
சிவன் தனது திருவுளப் பாங்கிற்கு மாறான வழியில் சென்று உழன்று கொண்டிருந்த என்னை அதற்குக் காரணமான அறியாமையைத் தனது திருவடிகளை என் சென்னி மேல் சூட்டு மாற்றால் போக்கி ஆட்கொண்டு, அதனால் தூய்மை பெற்ற எனது உள்ளத்திலே அவன் நீங்காது புகுந்து நிற்குமாற்றால் யான் அவனது அருளேயாய் நிற்கச் செய்து, அதனால், எனது இயற்கையை எய்திய எனக்கு அவனது அரிய இன்பத்தை அவன் தந்தவாறு எவ்வாறு என எண்ணி யான் ஒன்றும் தோன்றாது நிற்கின்றேன்.Special Remark:
ஏகாரங்கள் மூன்றும் அவற்றுக்கு எதிரானவற்றி னின்றும் பிரித்து நிற்றலால் பிரிநிலைகள். ``சூட்டி`` என்பதன் பின் `ஆட்கொண்டு` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. நிறம் - மார்பு; அஃது ஆகுபெயராய் நெஞ்சத்தைக் குறித்தது. அறிவை நெஞ்சமாக - உள்ளமாகக் கூறுதல் வழக்கு. ``நின்மலர்`` என்றது அதன் பயனாகிய ஞானத்தை உணர்த்தி நின்றது. இயற்கையை `தருமம்` என வழங்கும் வடமொழி வழக்கே பற்றி இவரும் ``அறம்`` என்றார். தித்திப்பதாகிய பால் அதன் இயற்கைக்கு மாறாகக் கசப்பது, நாவில் சேர்ந்த `பித்தம்` என்னும் செயற்கையாலேயாம். அந்தச் செயற்கை நீங்கிய பொழுது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல உறவுப் பொருளாகிய திருவருள் பகைப்பொருளாக உயிருக்குத் தோன்றுதல், அவ்வுயிரை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையாலேயாம். அச்செயற்கை நீங்கியபொழுது திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும் இதனை உமாபதி தேவர்,``தித்திக்கும் பால்தானும் கைக்கும்; திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின்``*
என விளக்கினார். அம்முறையிலே இங்கு நாயனார் ``அறமே புகுந்த எனக்கு`` என்றார். `புகுந்க` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பால் தித்தித்தலும், திருவருள் உறவுப் பொரு ளாதலும், செயற்கை காரணமாக முன்பு வேறுபட்டிருந்து, பின்பு விளங்குதலால் செயற்கைபோலச் சொல்லப்படுதல் பற்றி, ``புகுந்த என்னை`` என்றார். இயற்கைத் தன்மையே `குணம்` என்றும், செயற்கைத் தன்மை `குற்றம்` என்றும் சொல்லப்படும். குற்றத்தை வடமொழியாளர், `உபாதி` என்பர்.
திறம் - வகை. அது காரணத்தின்மேல் நின்றது. உயிர்களைச் சிவன் தானாகச் செய்தற்குக் காரணம் அவனுக்குள்ள அருளேயன்றிப் பிறிதின்மையை விளக்குவார், ``திறம் ஏது என்று எண்ணித் திகைத் திருந்தேன்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாய் நின்று செய்வன எல்லாம் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage