
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பதிகங்கள்

உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
English Meaning:
Nandi Planted His Feet on me and imparted GraceThe birth I took,
The impurities (malas) I bore
He dispelled as but Maya`s cloud;
``You are of these rid`` — so saying
He planted His Feet on me—
He the Nandi famed;
All unworthy knowledge I gave up,
I prostrated and at His feet prayed.
Tamil Meaning:
`நந்தி` என்னும் பெயரை உடையவனாகிய சிவன், யான் தொன்று தொட்டு என்னைப் பொருந்தி வந்தனு கரண புவன போகங்களும், அவற்றிற்கு நிமித்தமாய் அநாதியே என்னைப் பற்றி நின்ற ஆணவமும் என்னோடு என்றும் இயற்கையாய் நீங்காது நிற்கும் குணங்களாகாது, ஒரு காலத்தில் விட்டு நீங்கும் குற்றத் தொகுதியே ஆதலை உணரச் செய்து, `அக்குற்றங்கள் அனைத்தினின்றும் நீங்கி இது பொழுது நீ தூயையாய் நிற்றலையும் பார்` என்று காட்டினான். அதனால் நான் மாயா காரியங்களால் பெற்ற பாச அறிவை நீக்கினேன்; அவனது அருள் வழியிலே நின்றேன்.Special Remark:
`இங்ஙனம் ஆதலின், திருவருள் இருளாய்க் குற்றங்களின் வீழ்த்துவதாவது, ஒளியாய் அவற்றினின்றும் மீட்பதே என்பது தெளிவாகின்றதன்றோ` என்பது கருத்து. ``மாயை`` என்பது இங்கு, நீடு நில்லாது விரைய மறைதலைக் குறித்தது. ஒரு பொருட்கு அதனை விட்டு என்றும் நீங்காததே `அதன் குணம்` என்றும், ஒரு காலத்தில் அதனை விட்டு நீங்குவது `அதற்குக் குற்றம்` என்றும் சொல்லப்படும். ``என`` என்பது `என்று உணர` என்றவாறு.``என்று அடி வைத்தான், என்பதை, `அடி வைத்து என்றான்`` எனப் பின் முன்னாக மாற்றி வைத்து உரைக்க. அடியைச் சென்னி மேல் வைத்தல் அருளை வழங்குதற்கு அடையாளம். திருவடி அருளே யாதலின், அதனைப் பணிதலாவது அதன்வழி நிற்றலேயாம்.
இதனால், திருவருள் ஒளியேயாதல் வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage