
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
பதிகங்கள்

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.
English Meaning:
By Inner Light Unite One in SivaInterminable are light and darkness
Only to those who have light, will darkness cease;
To the eyes that see light, darkness is not;
So, too, when the inner light dispels darkness
The Jiva with Siva one becomes.
Tamil Meaning:
`ஒளி, இருள்` என்றும் இரண்டில் எதுவும் எக் காலத்திலும் அழிந்தொழிவதில்லை. (ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்குமேயன்றி அழிந்து போவதில்லை. அஃது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். இந்நிலையில்,) நீங்காது நிற்கும் ஒளியோடு கூடிய கண்ணிற்கே ஒருஞான்றும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளி யாகவே விளங்கும் நிலை உளதாகும். ஆகவே, ஒளியோடு கூடும் பொழுது ஒளியாயும், இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்போல்வது ஆன்மா. அஃதாவது கண் ஒளிப் பொருளுமன்று; இருட்பொருளுமன்று; அவ்விரண்டினும் வேறு. ஆயினும் ஒளியோடு கூடியபொழுது ஒளியாயும், இருளோடு கூடி யிருளாயும் நிற்கும். அது போல ஆன்மாப் பதியும் அன்று; பாசமும் அன்று. அவ்விரண்டினும் வேறு. ஆயினும் பதியோடு கூடிய பொழுது பதியாயும், பாசத்தோடு கூடியபொழுது பாசமாயும் நிற்கும். ஒளிவந்தபொழுதும் இருள் அழிவ தில்லை. ஆயினும் ஒளியின்முன் இருள்தோன்றாது அடங்கியிருக்கும். ஒளிவருவதும், போவதுமாய் இருப்பின்கண் ஒளியாயும், இருளாயும் வேறு வேறு நிலைகளை அடையும். வந்த ஒளி பின் நீங்காது நிற்பின் கண் அவ்வொளியேயாய்ப் பின் இருளாக மாறாது. அதுபோல, மாயா கருவிகள் வந்து கூடுவனவும், பிரிவனவுமாகிய புற ஒளிகளாகும். அதனால் அவற்றோடு கூடிய உயர் அறிவாயும், அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். திருவருளாகிய ஒளிவந்த பின் நீங்காதே நிற்கும் அகவொளியாகும். அதனால் அதனோடு கூடிய உயிர் பின்பு ஒரு ஞான்றும் இருளாகாது ஒளியேயாய்ச் சிவமாய் விளங்கும்.Special Remark:
இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகள் ஒட்டணியாய் நிற்றலின், இதன் பொருள் இவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. ``ஒளியும் ஒழியாது`` என இறந்து தழுவிய எச்ச உம்மை கொடுத்துக் கூறியதனால், இரண்டாம் அடியின் முதலில் உள்ள ஒளி, `ஒழியா ஒளி` என்பது பெறப்பட்டது. ஒழியா ஒளியாவது இயற்கைப் பேரொளி யாகிய ஞாயிற்றின் ஒளி. திருவருளின் இயல்பிற்கு அதனினும் சிறந்த உவமையின்மையால் அஃது அழியா ஒளியாக உபசரிக்கப் படுகின்றது. ஒழியும் ஒளி பல இல்லங்களிற் பலரால் ஏற்றியும், அணைத்தும் வைக்கும் விளக்கொளி. திருவருள் ஞாயிறு போன்றதும், மாயா கருவிகள் விளக்குப் போல்வனவுமாகும். மாயா கருவிகளால் பெறும் அறிவு பாச அறிவே ஆகையால், அது நீக்கத்தக்கதாயிற்று. ``அறியாமை அறிவகற்றி``l என்னும் சித்தியாரிலும், ``செறி வற்றுலகோ டுரைசிந் தையுமற்று - அறிவற்று அறியா மையும் அற்றதுவே``3 என்னும் கந்தர் அனுபூதியிலும் ``அறிவு`` என்றது, நீக்கத் தக்கதாகிய பாச அறிவையேயாகும்.ஒளியில் நின்றோரது கண்ணின் இயல்பை அதனையுடையார் மேல் ஏற்றிக் கூறினார். ``உயிர்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டி, ``உள்`` என்பதை ஒளியோடு இயைத்து, உயிர் ஒளி இருள் கண்ட கண்போல வேறாய், உள் ஒளியால் உள் இருள் நீங்கிச் சிவமாம்` என முடிக்க. திருவருளை ``உள் ஒளி`` என்றதனால் கருவிகளாகி ஒளிவெளி ஒளியாயிற்று. வெளியாவது உயிருக்கு வேறாய் நிற்பது.
இதனால், திருவருள் பாச ஒளிபோலப் புறமாய் நிலையாத தாகாது, அகமாய் நிலைபெற்று நிற்கும் சிறப்புடைய ஒளியாதல் கூறப்பட்டது. இம்மந்திரத்தின் முதலடிப் பொருள், ``ஒளிக்கும், இருளுக்கும் ஒன்றேயிடம்; ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்; எனினும் இருள் அடராது`` * எனக் கொடிக்கவியிலும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage