
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
பதிகங்கள்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.
English Meaning:
Inner Vision ends BirthsThey glimpse not the Dawn,
Nor the Spaces Vast;
Nor the Vision in Spaces;
Close your inner eyes hard
And then see;
Behold, there is the Light
That brings not another day!
Tamil Meaning:
ஒளியைக் காணும் கண் இல்லாதவர் இருள் புலர்ந்தாலும் புலர்ந்ததனை அறியமாட்டார். அதனால், விடிந்தபின் ஒளியில் பொருள்களை நன்கு கண்டு பயன் கொள்ளவும் மாட்டார். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர் தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டார். அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரமாட்டார். அதனால் நீவிர் அவ்வாறின்றிப் பரியதாகிய ஊனக் கண்ணை மூடி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காணுங்கள்; அத்திருவருளே அறியாமை யாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகும்.Special Remark:
முதலிரண்டடிகள் ஒட்டணி `விடியிலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. கடுமை பருமையை உணர்த்திற்று. ``இமை`` என்றது ஆகுபெயர். கட்டுதல் - தடுத்தல். காணுதற்குச் செயப்படுபொருள். முதற்கட் கூறியவாற்றால் `திருவருள்` என்பது பெறப்பட்டது. ``விடியாமை`` என்பது `இரவு` என்னும் பொருட்டாய் இருளைக் குறித்தது. ``காக்கும்`` என்பது, ``குற்றமே காக்க பொருளாக`` l என்பதிற் போல நின்றது. `திருவருளே விளக்கு` என்றதனால் `நீவிர் அவ்விளக்கையே நுமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` என்பதும் கூறினாராயிற்று.இதனால், `இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage