
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
பதிகங்கள்

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
English Meaning:
They seek Worldly PleasuresOut of mind, the mirror of illusion rises
Think of it, even its shadows they see not
And nothing they do for the fruits of Karma to drop;
The temptations of the backyard drain, they go after.
Tamil Meaning:
உயிர்கட்கு முதற்றொட்டு அவற்றின் அறிவாகிய கண்ணிற்கு அமைந்த மாயையாகிய கண்ணாடி ஆணவமாகிய குற்றங் காரணமாகப் பொருளியல்பைத் திரித்துக் காட்டும் வாஞ்சனைக் கண்ணாடியாய் உள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவுகொண்டு இதன் இயல்பை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் நல்லாசிரியர் அவர்களது வினை நீங்கும் வழியை விளக்கிக் கூறினாலும் விளங்கிக்கொள்ள மாட்டார். அவர் இயல்பு தலைவாயில் வழியைக் காட்டினாலும் புறக்கடை வாயிலை விரும்பி அதன்வழி நுழையும் இயல்பு போல்வதாம்.Special Remark:
அறிவை `மனம்` என்றலும் வழக்கு. ``எழுந்தது`` என்னும் வினைப்பெயர். `தோன்றியதாகிய கண்ணாடி` என்பதைக் குறித்து எழுவாயாய் நின்று, ``மாயக்கண்ணாடி`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மாயம் - பொய்; திரிபு. இங்ஙனம் கூறவே, `அக்கண்ணாடியாவது மாயையே` என்பது விளங்கிற்று. ``நினைப்பு`` என்று சிந்தனை அறிவை. `அதனில் அதன் நிழலையும் காணார்` என்க. ``நிழலையும் காணார்`` என்று, `அதன் இயல்பைச் சிறிதும் அறியார்` என்றவாறு. ``காணார்`` என்பதும் எதிர்மறை வினைப்பெயர். காணாமை பக்குவம் இன்மையினாலாம். `விளக்கவும்` என்பது திரிந்து நின்றது `விளக்கினும்` எனப் பாடம் ஓதலுமாம். `விளக்குவார் நல்லாசிரியர்` என்பது ஆற்றலால் பெறப்பட்டது. ஓர் இல்லத்தில் தலை வாயிலால் நுழையாது புறக்கடை வாயிலால் நுழைவார் இன்னல் பலவும் உறுதல் வெளிப்படை. இதனுள் ஒருவாற்றான் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உளதாயினும் அது பயன்படாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage