
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
பதிகங்கள்

பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.
English Meaning:
Sanmarga Leads to Svarupa StateRending the Soul`s bonds asunder
Conjoining him to the Lord
Melting the heart that knew no melting
Merging into the Primal Manifestness (Svarupa)
That is Truth Eternal
Sanmarga verily gives Jiva
The rest that knows no commotion ever.
Tamil Meaning:
ஆன்மாவின் பசுத்துவம் காரணமாக வந்து பொருந் திய சம்பந்தங்களாகிய கருவி கரணங்கள் அனைத்தையும், `தன்னின் வேறானவை` எனக்கண்டு கழித்துத் தன்னைப் பதியாகிய சிவனுடன் பொருத்தி, அங்ஙனம் முன்பு பொருந்தாதிருந்த நிலையில் மறந்திருந்த அவனது உபகாரத்தை இடைவிடாது உணர்தலால், முன்பு அன்பினால் நெகிழ்தல் இன்றி வன்மையுற்றிருந்த மனத்தை இப்பொழுது நெகிழ்ந்து உருகும்படி உருகப்பண்ணி, அவ்வன்பினாலே, என்றும் மாற்றம் இன்றி நிற்கும் மெய்ம்மையாகிய சிவனது தன்னியல்பு வெளிப் பாட்டில் அசைவின்றி நிற்றலே முற்ற முதிர்ந்த சன்மார்க்கமாகும்.Special Remark:
``பசு பாசம் நீக்கி`` என்றது, ஆன்ம தரிசனத்தில் நிகழும் தத்துவ சுத்தியாகிய சுத்த சுழுத்தியையும், ``பதியுடன் கூட்டி`` என்றது, சிவயோகத்தில் நிகழும் ஆன்ம சுத்தியாகிய சுத்த துரியத்தையும், ஏனையவெல்லாம் சிவபோகமாகிய அதீதத்தையும், குறித்தனவாம். இரண்டாம் அடி முதலாயவற்றில் கூறியவற்றை மெய்கண்ட தேவரும்,``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` 1
என அருளிச்செய்தல் காண்க.
இதனால், முற்ற முதிர்ந்த சித்தாந்த ஞானத்தின் சிறப்புணர்த்து முகத்தால், அது சிறந்த சன்மார்க்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage