ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே. 

English Meaning:
In the act of Pratyahara
All the world will be visioned;
Be rid of the despicable darkness
And seek the Lord,
If your thoughts be centred firm
You shall Divine Light see
And immortal thereafter be.
Tamil Meaning:
பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.
Special Remark:
மனத்தைக் குறித்த இடத்தில் செல்லச் செய்தலாதல் பற்றிப் பிரத்தியாகாரத்தை, ``குறிப்பு`` என்றார். வெறுப்பு இருள் - வெறுக்கப்படுவதாகிய அறியாமை. ``நாடும்`` என்பது எச்சம். சிக்கென்று உணர்தல் - உறுதியாகப் பற்றுதல். `அறிவிப்பு` என்பது இடைக்குறைந்து நின்றது. `பிறருக்கு உணர்த்தும் தன்மை` என்றது, குருவாகும் தன்மையை, எந்நிலையிலும் குரு இறைவனேயாதல் பற்றி, ``அமரன்`` என்றார்.
இதனால், பிரத்தியாகாரத்தின் கன்ம வகை ஞானவகைகளின் பயன்கள் கூறப்பட்டன. `தாரணை, தியானம், சமாதி` என்பவற்றையும் இங்ஙனம் பகுத்துக் கூறுதல் காண்க.
உயிருக்கு மாயாபந்தத்தின் அடிநிலை, மாயாகாரியங்களை மறவாது உணர்ந்து நிற்கும் பொருள் உணர்வேயாம். இவ்வுணர்வு சொல்லால் உண்டாகலின், அவ்வுணர்வு சொல் வடிவிலே அமைவ தாகின்றது. ஆகவே, அப்பந்தத்தினின்றும் நீங்குதற்குச் சொற்களைச் சுட்டி உணர வேண்டியுள்ளது.
சொற்கள் அளவில்லனவாயினும், அச் சொற்களுக்கு மூலமாய் உள்ள எழுத்துக்கள் அளவிற்கு உட்பட்டன. ஆகவே, எழுத்துக்களைச் சுட்டி உணரின், அது சொற்களை உணர்வதே ஆகும். அதனால், அனைத்து எழுத்துக்களையும் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங் களில் ஏற்ற பெற்றியில் வைத்துச் சிந்திக்கும் முறை யோக நூல்களில் கூறப்படுகின்றது.
`அனைத்து மொழிகளில் உள்ள எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்களில் அடங்கிக் கிடக்கின்றன` என்பது வேத மதங்களின் கொள்கை. அதனால், அவற்றை அவை, `மாத்துருகாட்சரம்` (எல்லா மொழிக்கும் மூலமாய் உள்ள எழுத்துக்கள்) எனக் கூறும்.
வட மொழியில் உள்ள எழுத்துக்கள் ஐம்பத்தொன்று, க்ஷகாரத்திற்குப் பின்பும் வேறு இரண்டெழுத்தைச் (:க:வ!) சேர்த்து `ஐம்பத்து மூன்று` என்று ஒருசிலர் (நன்னூலார் முதலியோர்) கூறுவர். பாணினியார் முதலாகப் பலரது கொள்கையும் `ஐம்பத்தோரெழுத்து` என்பதே, அவற்றுள்ளும் `லகாரம் ளகாரங்கட்கும் தம்முள் வேற்றுமை இல்லை` என்று கொண்டு, ளகாரத்தை நீக்கி, `ஐம்பதெழுத்து` என்றே கூறுவர். க்ஷகாரமே நீக்கற்பாலது என்பது மற்றொரு கொள்கை. `ளகாரம் க்ஷகாரம்` இரண்டையுமே நீக்கி, `நாற்பத்தொன்பது எழுத்து` என்றே கொள்ளவேண்டும் என்பது வேறொரு கொள்கை. `ஆல வாய்க் கடவுள் அகாரத்திற்கு உரியவனாய் நிற்க, ஆகாரம் முதலிய ஏனை நாற்பத்தெட்டிற்கு நாற்பத்தெண்மர் புலவர்களாக, கடைச்சங்கப் புலவர் கண்ணுதற் கடவுளை உள்ளிட்டு நாற்பத்தொன்பதின்ம ராயினர்` எனத் திருவிளையாடற் புராணம் கூறுவது, இறுதியிற் கூறிய கொள்கையை வலியுறுத்துவதாய் உள்ளது. எனினும், இந்நாயனார் (திருமூலர்) பலவிடத்தும் ஐம்பதெழுத்தே கூறுகின்றார்.
வடமொழிக்குச் சிறப்பெழுத்தாகக் கூறப்படுவன பல இருப்பினும், அதற்குச் சிறப்பிற் சிறப்பாக உள்ள எழுத்து முப்பத்து மூன்றாவது மெய் (ஹ என்னும்) எழுத்தே, உயிரெழுத்தில் இறுதியில் உள்ள ஒன்றும், இம் மெய்யின் சார்புடையதே, `அ` என்றால் பிறமொழி; `ஹ` என்றால் வடமொழி; `ஆம் ஊம், ஓம்` என்றால் பிற மொழி; `ஹாம், ஹூம், ஹோம்` என்றால் வடமொழி எனக்கொள்ளப் படுகின்றது. வடமொழியைத் `தெய்வமொழி` என்றும், அதனால் `அதுவே மந்திர மொழி` என்றும் சொல்வதற்குச் சிறந்த காரணம், இம்முப்பத்து முன்றாம் மெய்யைச் சிறப்பாக ஆள்வதேயாகும்.
தமிழில் ஆய்த எழுத்திற்கு இத்தன்மை உண்டு. பிற மொழி களிலும் இந்த மெய்யெழுத்து உண்டு. என்றாலும், அம்மொழிகள் இவ்வெழுத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த முப்பத்து மூன்றாவது மெய்யை யோகநூல்கள் ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) வைத்துத் தியா னிக்கும்படி கூறுகின்றன, அதனோடு கணக்கில் கொள்ள வேண்டாத க்ஷகாரமும் அங்குச் சேர்க்கப்படுகின்றது. ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள விசுத்தியில் (கண்டத்தில்) உயிரெழுத்துப் பதினாறும், அதற்குக் கீழுள்ள நான்கு ஆதாரங்களிலும் கீழிருந்து முறையே ககாரம் முதலாக, `பன்னிரண்டு, பத்து, ஆறு, நான்கு` என்னும் அளவிலான மெய் யெழுத்துக்கள் ஸகாரம் ஈறாக வைத்துத் தியானித்தல் கூறப் படுகின்றது. ஆகவே, 2+16+12+10+6+4= 50 எழுத்துக்களும் 6 ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை பெறப்படுகின்றது. இதில் ளகாரம் சேர்க்கப்படாமை குறிப்பிடத் தக்கது. எழுத்துக்களின் முறைவைப்பில் முன்முன் உள்ளவை சிறப் புடையன; பின் பின் உள்ளவை சிறப்பில்லன.
ஒவ்வோர் எழுத்தும் தாமரை மலரின் ஒவ்வோர் இதழின் மேல் உள்ளனவாகத் தியானித்தல் வேண்டும் எனப்படுகின்றது. எனவே, மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களும் முறையே நான்கு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு` என்னும் இதழ்களை உடைய தாமரை மலர்களாகச் சொல்லப்படுகின்றன. இருதய கமலம் எட்டிதழ்த் தாமரையாகக் கூறப்படுதல் தத்துவக் கோட்பாடு பற்றியது; ஆகவே, அதற்கும், இதற்கும் தொடர்பில்லை. உணர்வு, தொடக்கம் முடிவு இரண்டிலும் குவிந்தே இருக்கும். இடைநிலையில் விரிந் திருக்கும்; தொடக்கத்தில் உள்ள குவிவிற்குக் காரணம் அறியாமையும், முடிவில் உள்ள குவிவிற்குக் காரணம் அடக்கமும் ஆகும். ஆகவே, கீழே உள்ள மூலாதாரக் கமலமும், மேலே உள்ள ஆஞ்ஞைக் கமலமும் குறைந்த இதழ்களைக் கொண்டவையாகவும், இடையில் உள்ள ஆதாரங்கள் மிக்க இதழ்களைக் கொண்டவையாகவும் குறிக்கப் படுகின்றன.
இனி, ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞை `விந்துத் தானம்` எனப்படுதலால், அதற்குக் கீழ் உள்ள விசுத்தி முதல் நான்கு ஆதாரங்கட்கு அதிதேவராய் அங்குள்ள கமல மலராகிய ஆசனத்தின் மேல் வீற்றிருக்கின்ற கடவுளர் முறையே, `சதாசிவர், மகேசுரர், உருத்திரர், திருமால்` என்பவராவர். இந்த நால்வரும் முறையே, `ஆகாயம், வாயு, தேயு, அப்பு` என்னும் பூதங்கட்கு அதிதேவர் ஆதலால், அப் பூதங்களுக்குரிய பீச மந்திரங்களாகிய `ஹம், யம், ரம், வம்` என்பன அத் தாமரை மலர்ப் பொகுட்டின்கண் வைத்து எண்ணப் படுகின்றன. இவற்றிற்கேற்ப மூலாதாரத்தில் பிருதிவிக்கு அதி தேவராகிய பிரமாவையும், அதற்குரிய பீசமாகிய `லம்` என்பதையுமே வைத்துத் தியானித்தல், வேண்டுமாயினும், மூலாதாரம் `குண்டலிக்கு இடம்` எனப்படுதலால், அதற்குரிய விநாயகரையும், பிரணவத் தையுமே அங்கு வைத்துத் தியானித்தல் சொல்லப்படுகின்றது.
இனி, மந்திரத்தை மட்டும் `லம்` என்பதாகவே வைத்துத் தியானித்தலும் காணப்படுகின்றது. ஆகவே, உலகில் கோயிலைப் பெறாத பிரம தேவர், ஆதாரங்களிலும் பிரமசாரியாராகிய விநாயகர் இடத்தில், அல்லது தமது தோற்றத்திற்கு முதலாகிய திருமாலிடத்தில் அடங்கி நிற்பவராகின்றார். இனி, சுவாதிட்டானம் முதலாகப் பிரமா முதலிய தேவர்களை வைத்து, சதாசிவரை ஆஞ்ஞையில் கொள் வாரும் உளர். சதாசிவரை விசுத்தியில் கொள்ளும் நிலையில் ஆஞ்ஞையில் சதாசிவருக்கு மேல் உள்ள சத்தியே தியானிக்கப் படுவாள். இவ்வாறெல்லாம் மனத்தை அகமுகப்படுத்தி நோக்க, புற நோக்குக் குறைந்து, அகநோக்கு மிகுவதாம் என்க. இத்துணையும் பிரத்தியாகாரம் கூறியவாறு.