
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
பதிகங்கள்

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.
English Meaning:
Two finger length above the MuladharaTwo finger length below the sex organ
Four finger length below the navel visible,
There within is Kundalini
A flaming fire lambent.
Tamil Meaning:
எருவாய்க்கு இருவிரற்கிடைமேலாகவும், வெளியே தோன்றி நின்று கருவைப் பயக்கும் கருவாய்க்கு இருவிரற்கிடை கீழாகவும் நிற்கின்ற வட்ட வடிவான குண்டலி சத்தியுள் தோன்றுகின்ற செவ்வொளியின் இடம், உந்திக்கு நான்கு விரற்கிடை கீழே உள்ளது.Special Remark:
இங்கு``மூலம்`` என்றது எருவாயை. எனவே, இஃது ஆதாரங்களுள் முதலாவதாகிய மூலாதாரத்தினை இனிது விளங்கக் கூறியதாயிற்று. ஞாலம் - பூமி; இடம். இதில் `அத்து` வேண்டாவழிச் சாரியை, ``குண்டலி`` எனப்படுவது சுத்த மாயையில் தோன்றும் எழுத் தோசையாகிய நாதமே. இதற்கு வட்டமே வடிவாகக் கொள்ளப்படு தலின், ``குண்டலி`` எனப் பெயர் பெற்றது. ``கோலித்த`` என்றதும் இதன் வடிவைக் குறித்ததேயாம். ``வட்டமாய் வளைந்து நிற்பது`` என்பது பற்றி, இது பாம்பாக வைத்துப் பாவிக்கப்படுகின்றது. இது பற்றியே உலகத்துப் பாம்பையும் வழிபாட்டிற்கு உரியதாகக் கருதும் வழக்கம் உளதாயிற்று. உண்மையாகச் செய்யும் வழிபாடு யாதா யினும், அதற்குப் பயன் தருபவன் சிவபெருமான் என்பதை நினைவு கூர்க.``குண்டலி எனப்படும் பாம்பு ஐந்து தலைகளை உடையது`` என்றல், வாக்குகள் சுத்த மாயையின் பஞ்ச கலைகளில் விருத்திப் பட்டு நிற்றலைக் குறிப்பது. சிவாலயங்களில் சிவலிங்கத்திருமேனிக்கு ஐந்து தலைப்பாம்பைக் கவசமாகச் சாத்தி வழிபடுதலும் சிவபெருமான் தனது சத்தி நிவிர்த்தி முதலிய ஐந்தாகிச் சுத்தமாயையின் ஐந்து கலை களிலும் நிற்க, அவ்விடங்கள் எல்லாவற்றிலும் சிவன் நிற்றலையே குறிக்கும்.
மந்திரங்கள் அனைத்தும் நால்வகை வாக்கு வடிவமாகிய சுத்த மாயையின் காரியங்களே. அக் கருத்து விளங்குதற் பொருட்டு, `அனைத்து மந்திரங்கட்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலி சத்தி`` என்பர். நால்வகை வாக்கினாலேயே யாவர்க்கும் பொருளுணர்வு உண்டாகின்றது. அவ்வுணர்வு ஆணவத்தின் சார்பால் உலகப் பொருள்களையே உணர்ந்து நிற்குங்காறும் ``அறிவு`` எனப்படாது ``அறியாமை`` என்றே சொல்லப்படும். அதனால், உலகர் எல்லாரிடத்தும் உள்ள குண்டலி சத்தியாகிய பாம்பு, கண்ணை விழியாது உறங்கிக் கிடப்பதாகின்றது.
உலக நடையிலும் அறிவு புருவ நடுவாகிய மேலிடத்திலும், அறியாமை மூலாதாரமாகிய கீழிடத்திலும் உள்ளன என்பதால், ``குண்டலிப் பாம்பு தனது அறிவுக்கு நிலைக்களமாகிய தலையை அறியாமைக்கு இடமாகிய மூலாதாரத்திலும், அறிவுக்கு நிலைக் களமாகாத வாலை அறிவுக்கு இடமாகிய நெற்றியிலும் வைத்துத் தலைகீழாகக் கிடந்து உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது`` எனவும், ``அர ணியில் அடங்கியுள்ள அக்கினி, கடைந்தபொழுது எரிந்து சுடுதல் போல, மூலாதாரத்தில் அடங்கியுள்ள அக்கினி, பிராணாயாம பிரத்தி யாகாரங்களால் மூண்டெழுந்து தாக்க, அக் குண்டலிப் பாம்பு கண் விழித்து எழுந்து தலைமேலாகவும், வால் கீழாகவும் சுழன்று, இயற்கை நிலையில் நிற்கும்`` எனவும் யோக நூல்கள் கூறும். இவற்றால் எல்லாம் பெறப்படுவது, ``யோக நெறியிற் பழகினால் உயிரினது உணர்வு புறப் பொருள்களாகிய உலகத்தைப் பற்றி நிற்றலை ஒழிந்து, உயிர்க் குயிராய் நிற்கின்ற இறைவனை உள்ளுணர்வாற் பற்றும்`` என்பதே. அதற்குச் சிறந்த துணையாவன பிரணவம் முதலிய மந்திரங்களும், பாவனைகளும், மனத்தால் அகத்தே செய்யும் வழிபாடுகளுமாகும். அவ்வழிபாடுகட்கு முதலாய் நிற்கும் திருமேனிகள் முன்பு உருவத் திருமேனியாய் நின்று, பின்பு அருவுருவத் திருமேனியாய், முடிவில் அருவத்திருமேனியாகும் என்க.
இதனுள்,``குண்டலியுள் எழும் செஞ்சுடர்`` என்றது, இறைவனது அருவுருவத் திருமேனியை, இது புறத்தே இலிங்கமாக வணங்கப்படுதல் போல, அகத்தே யோகத்தில் பேரொளிப் பிழம்பாகக் கொண்டு தியானிக்கப்படும். அதன் விளக்கம் எல்லா ஆதாரங்களிலும் நிறைந்து நிற்பதாயினும், இங்குக் குறிக்கப்பட்ட இடமே அஃது இருக்கும் இடம் என்பது இதனால் பெறப்பட்டது. இதுபற்றியே இவ்விடம் ``சுவாதிட்டானம்`` எனப் பெயர் பெற்றது. ``தனது இடம் `` என்பது இப்பெயரின் சொற்பொருள். தான், உள்ளெழும் சோதி. சோதியின் இயல்பு கீழிருந்து மேல் நோக்கி எழுவதாகலின், பிரத்தியாகாரப் பயிற்சியால் இது மேல் நோக்கி வளர்ந்து காட்டும். மூலாதாரம் குண்டலிக்கு இடமாயினமையின், அதற்கு மேலுள்ள இதுவே இச் சோதிக்கு இடமாயிற்று. இஃது இரண்டாவது ஆதாரம். இதன் இயல்பு கூறவே, ``மனத்தை மூலாதாரத்தில் நிறுத்திப் பயின்றபின், இவ்விடத்து நிறுத்திப் பயில்க`` என்றதாயிற்று.
இதனால், ``சுவாதிட்டானம்`` என்னும் இரண்டாவது ஆதார நிலை கூறப்பட்டது.
மூன்றாவது ஆதாரம் ``மணிபூரகம்`` என்பது; இஃது உந்தித்தானமே, ``மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்க`` என மேற் கூறியதனானே இதுவும் ஓர் ஆதாரமாதல் அறியப்படுதலின், இவ் விடத்தும் மனத்தை நிறுத்துதல் உய்த்துணர்வகையால் பெறப்படுதல் பற்றி எடுத்தோதாராயினார், வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடமாதல் பற்றி, ``மணிபூரகம்`` எனப் பெயர் பெற்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage