
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
பதிகங்கள்

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
English Meaning:
The world is full contradictions of sounds, desires and forms,But within the diversity is the unity which
You of beautiful form veil away from our vision.
Tamil Meaning:
தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.Special Remark:
`அரைக்கின்ற, கரக்கின்ற` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. அரைக்கின்ற அருள் - துன்புறுத்துகின்ற கருணை; மறக்கருணை; என்றது திரோபவத்தை. `அரிக்கின்றருள்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ``தரும்`` என்றது முற்று. தனித்து நில்லாது தொக்குநின்று காரியத்தைத் தோற்றுவித்தலின், நிலம் முதலிய கருவிகளை, ``அங்கங்கள்`` என்றார். அங்கங்கள் முதலாக வேண்டும் இடங்களில் தொகுக்கப்பட்ட எண்ணும்மைகளை விரித்துக் கொள்க. ``தான்`` என்பதனை முதலில் வைத்து உரைக்க.இதனால், சிவபெருமான் உலகத்தை ஆக்கி, அதனுட்கரந்து நின்று திரோபவிக்குமாறு கூறப்பட்டது. ``அருள்`` என்றதனால், மறைத்தலும் அருளேயாதல் குறித்தார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage